என் உயிருள்ளவரை எஸ்பிபியை உள்ளத்தில் வைத்திருப்பேன்: கார்த்தி உருக்கம்

என் உயிருள்ளவரை எஸ்பிபியை உள்ளத்தில் வைத்திருப்பேன்: கார்த்தி உருக்கம்
Updated on
1 min read

உயிருள்ளவரை உள்ளத்தில் எஸ்பிபி சாரை வைத்திருப்பேன் என்று கலங்கியபடியே கார்த்தி பேசினார்

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

"எஸ்பிபி சாரைப் பற்றி என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லுவானா என்று தெரியவில்லை. சில பேர் மக்களுடைய வாழ்க்கையைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும், துணையாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் எஸ்பிபி சாருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன் என்பதால் அவர்கூடவே வளர்ந்திருக்கிறேன். எனக்கு அவர் இயற்கை மாதிரி தான். வானம், பூமி, காற்று மாதிரி தான் எஸ்பிபி சார். அந்தளவுக்கு எனக்குள் இருப்பவர் எஸ்பிபி சார்.

பல நாட்கள் அவருடைய பாடல்கள் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறோம். இப்போது என் பெண்ணும் அவருடைய பாட்டுக் கேட்டுத்தான் தூங்குகிறாள். ஒவ்வொருவரிடமும் பேசும் போது, அவர் இல்லை என்ற சோகம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. அது ஆறவே ஆறாது என நினைக்கிறேன். அவருடைய பாடல்களை இப்போது கேட்கும் போதும், பேசிய விஷயங்களைப் பார்க்கும் போது அவருடைய குரலை விட அவ்வளவு இனிமையாக வாழ்ந்திருக்கிறார்.

என்னுடைய பாக்கியம் கடந்தாண்டு என் படத்தில் ஒரு பாடல் பாடினார். அப்போது அந்த ஸ்டுடியோவில் சாதாரண ஒரு மனிதரைக் கூட அவர் கடந்து போகவில்லை. எப்படியிருக்க என்று கேட்டுப் பேசினார். ஒவ்வொருத்தரையும் அவ்வளவு நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. எஸ்பிபி சாரிடமிருந்து சக மனிதரை நேசிக்கும் பழக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எஸ்பிபி சார் வி ஆல்வேஸ் மிஸ் யூ. என் உயிருள்ளவரை என் உள்ளத்தில் உங்களை வைத்திருப்பேன்"

இவ்வாறு கார்த்தி கலங்கியபடியே பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in