Last Updated : 23 Sep, 2015 03:36 PM

 

Published : 23 Sep 2015 03:36 PM
Last Updated : 23 Sep 2015 03:36 PM

குட்டிக் கதைகள் சொல்வது எப்படி?- கபிலனிடம் ரஜினி கூறிய ரகசியங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். 'கபாலி' படத்துக்காக கபிலன் எழுதிய பாடலைக் கேட்ட ரஜினி, அவரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

ரஜினிகாந்த்தை சந்தித்த நிமிடங்கள் குறித்து கபிலனிடம் கேட்ட போது, " ஏற்கனவே ’சந்திரமுகி’ படத்தில் ‘அண்ணனோட பாட்டு…’ என்ற பாடலை ரஜினி சாருக்காக எழுதியிருக்கிறேன். அப்பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு ‘அஞ்சுக்குள்ள நாலை வை… ஆழம் பார்த்து காலை வை..’ என்ற வரிகளை மிகவும் ரசித்தார். அப்போது என்னிடம், “கபிலன் என்ற பெயரைக் கேட்டதும் ரொம்ப வயசானவரா இருப்பாரோன்னு நினைச்சேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

'சிவாஜி' படப்பிடிப்பு தளத்தில் ‘மழைக்கு ஒதுங்கிய கவிதைகள்’ என்ற புத்தகத்தை அவருடைய உதவியாளரிடம் “சார் ஓய்வா இருக்கும்போது அவரிடம் கொடுங்க” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் உதவியாளர் “சார் உங்களை உள்ள வரச் சொன்னார்" என்றார். அப்புத்தக்கத்தின் தலைப்பு நன்றாக இருக்கிறது என பாராட்டியவர், "ஒரு வெளியீட்டு விழா வைத்து இதை வெளியிடுங்களேன்” என்று கூறினார்.

இவ்விரண்டு சம்பவங்களுக்குப் பிறகு இப்போது தான் ரஜினி சாரைப் பார்த்தேன். நான் எழுதிய பாடல் வரிகளைப் பற்றி நிறைய பேசினார். என்னுடைய குடும்பத்தினர் பற்றிக் கேட்டார். என் மகனின் பெயர் ‘பௌத்தன்’ என்றும், மகளின் பெயர் ‘தூரிகை’ என்று சொன்னேன். பௌத்தன் என்றதும், பௌத்தம் பற்றியும், சித்தர்கள் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார் ரஜினி சார்.

அவரிடம், "சார்… நீங்க விழாக்களில் பேசும்போது, மகாபாரத கதைகள் நிறைய சொல்றீங்க. நீங்க விரும்பி படிக்கறது மகாபாரதம்தானா?" என்று கேட்டேன். அதற்கு, “நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் படிக்கிற புத்தகம் மகாபாரதம் தான். எத்தனை முறை படித்தாலும், திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிற புத்தகம் அது. விழாக்களில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்ல வேண்டும் என்று என் ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதற்காகவும் மகாபாரத துணைக் கதைகளை படிப்பேன். அதே நேரத்தில் நவீன இலக்கியங்களும் நிறைய படித்து வருகிறேன்" என்றார் ரஜினி சார்.

'கபாலி' படப்பிடிப்பில் ஒரு காட்சி நடித்துவிட்டு வந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே பேச துவங்கினார். சித்தர்கள் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித்திடம், "கபிலன் என்னோட சாப்பிடட்டும்" என்றார். நான் உடனே, "கோயிலுக்கு மாலைப் போட்டிருக்கிறேன். அதனால் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன்” என்றவுடன் "சைவமும் இருக்கு. சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்" என்றார். அவருடைய வீட்டில் இருந்து வந்திருந்த உணவை இருவரும் இணைந்து சாப்பிட்டோம்" என்று தெரிவித்தார் பாடலாசிரியர் கபிலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x