

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் எம்.ஏ.கிச்சா ரமேஷ் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்காக சரத்குமாருக்கு ஆதரவாக வேலை செய்து வருகிறேன். இந்நிலையில், முகம் தெரியாத நபர்கள் என் அலுவலகத்துக்கு வந்தும், செல்போன் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுகின்றனர். என்னை செல்போனில் மிரட்டியவர் நடிகர் ரித்தீஷ்.
சரத்குமார் உத்தரவின்படி தார்மீகமான முறையில் தேர்தல் பணி ஆற்றிவருகிறோம். நடிகர் ரித்தீஷ் தன் பழைய கூட்டாளியான திமுகவை சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து சதித் திட்டங்களை தீட்டி, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்களை தன்னுடன் சங்கக் கூட்டங்களுக்கு அழைத்து வருகிறார். சரத்குமார் அணிக்கு சங்க உறுப்பினர்களிடம் பெரும் செல்வாக்கு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ரித்தீஷ், பூச்சிமுருகன், அவர்களது கூட்டாளி பஷீர் என்ற விஜய் கார்த்திக் ஆகியோர் தேர்தலுக்குள் பெரும் மோதலை ஏற்படுத்தி தேர்தலை நடத்தவிடாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து எங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.