

தமிழ் மக்கள் மீது கே.பாலசந்தர் செலுத்திய தாக்கம் மிகப்பெரியது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்குப் பிறகு இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரத் தொடங்கினார். ஆஸ்கர் விருதுகள் வென்று, உலக அளவில் பிரபலமானார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் சுதா ரகுநாதனின் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பேட்டியில் கே.பாலசந்தர் தயாரிப்பில் அறிமுகமானது, கே.பாலசந்தர் படமான 'டூயட்' படத்துக்கு இசையமைத்தது தொடர்பாகப் பேசியுள்ளார்.
அதில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:
"தமிழ் மக்கள் மீது கே.பாலசந்தர் செலுத்திய தாக்கம் மிகப்பெரியது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கிலும் அவருடைய ஆளுமை இருந்தது. நான் இசையமைத்த முதல் படமே கவிதாலயா தயாரித்தது என்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். 'ரோஜா' ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் அவர்தான் என்னை அனைவரிடமும் அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு உங்கள் படத்தில் பணிபுரிய வேண்டும் என்று அவரிடம் கூறினேன்.
ஒரு இசைக்கலைஞரைப் பற்றிய கதை ஒன்று தன்னிடம் இருப்பதாக என்னிடம் கூறினார். அது தான் ‘டூயட்’. அப்படத்துக்காக சாக்ஸபோன் கலைஞரான கத்ரி கோபால்நாத்தைப் பயன்படுத்த விரும்பினேன்.
பின்னர் படவேலைகள் தொடங்கியதும் விசாகப்பட்டினத்திற்கு இசையமைப்பதற்காகச் சென்றேன். அங்கு எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஏனெனில், பாலசந்தர் சாரின் முந்தைய அனைத்துப் படங்களிலும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என இசை அற்புதமாக இருக்கும். அவற்றுக்கு மிகப்பெரிய வரவேற்பும் தேசிய விருதுகளும் கூட கிடைத்தன. எனவே எனக்கு அந்தப் பொறுப்பு மிகவும் பெரியதாக இருந்தது. அந்தப் பொறுப்புதான் அந்தப் படத்தில் என்னைக் கடினமாக உழைக்க வைத்தது".
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.