மனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated on
1 min read

மனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முதன்மைக் கதாபாத்திரம், காமெடி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் மனோரமா. இவருடைய நடிப்புக்கு அனைத்து முன்னணி நடிகர்களுமே ரசிகர்கள்தான். 1,500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆச்சி' மனோரமா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர். தேசிய விருது, தமிழக அரசு விருது, பத்மஸ்ரீ விருது என எக்கச்சக்க விருதுகளையும் வென்றவர்.

2015-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மனோரமா காலமானார். இவருடைய மறைவுக்குப் பிறகு இவர் நடித்த கதாபாத்திரங்களில் நடிக்க மாற்று நடிகைகளே இல்லை என்று பல இயக்குநர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

தற்போது இவருடைய பயோபிக்கில் நடிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை" என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், "ஆச்சி மனோரமா பயோபிக்கில் நடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் காமெடி, குணச்சித்திரக் கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்" என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் அளித்த பல பேட்டிகளில் கூட மனோரமா பயோபிக்கில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in