

எஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி பெயரில் தேசிய விருது, எஸ்பிபிக்கு பாரத ரத்னா எனத் திரையுலகினர் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது எஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விவேக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கடந்த 50 ஆண்டுகளாக இந்தியத் திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இது தவிர, பல ஆயிரம் பக்திப் பாடல்களைப் பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.
72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்தியக் குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசைக் கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்".
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.