

விரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் சரண் பேட்டியளித்துள்ளார்.
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று (செப்டம்பர் 27) காலை எஸ்பிபி சரண் மூன்றாம் நாள் சடங்குகளைச் செய்ய வந்தார். அதனை முடித்துவிட்டு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் எஸ்பிபி சரண் பேசியதாவது:
"ரொம்ப நன்றிக்கடன் பட்டுள்ளேன். கடந்த 50 நாட்களாக எங்கள் குடும்பத்துடனே இருந்து அப்பா மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தீர்கள். இப்போது அப்பா எங்கள் தாமரைப்பாக்கம் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இது எங்கள் குடும்பம் எதிர்பார்க்காத நிகழ்வாக அமைந்தது.
தமிழக அரசு, காவல்துறையினர், மாநகராட்சியினர், தாமரைப்பாக்கம் மக்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி. சென்னையிலிருந்து அப்பாவின் உடல் இங்கு வரும் வரை வழிநெடுகிலும் மக்கள் சாலைகளில் நின்று கொண்டிருந்தார்கள். அவர் அந்த அளவுக்குப் பெரிய ஆளுமை என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. அப்பாவாக அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் பெரிய ஆளுமை என்று கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியவில்லை.
கண்டிப்பாக இங்கு அப்பாவுக்கு நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பது என் ஆசை. எங்களுக்கு எஸ்பிபி ஆகவே இருந்துள்ளார். அவர் மக்களுடைய சொத்து. உங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அப்பாவுக்கு ஒரு நல்ல நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் குடும்பத்தினரின் ஆசை. இதற்கு இனிமேல்தான் திட்டமிட வேண்டும். மேப்பில் அப்பாவின் பெயர் போட்டால் இந்த இடத்தைக் காட்ட வேண்டும்.
அப்படியொரு அற்புதமான நினைவு இல்லமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. உலக மக்கள் அனைவருக்கும் அப்பாவைக் கொடுத்துள்ளோம். இனிமேலும் கொடுக்கவுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் நினைவு இல்லம் திட்டம் குறித்துச் சொல்லிவிடுவோம். அதற்கு முன்னர் நிறையப் பேர் வெளியூரிலிருந்து வந்து அப்பாவைப் பார்க்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்".
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.