

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி பாடகராக அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், இளையராஜா உள்ளிட்ட சிலர்தான். தற்போது நண்பர் எஸ்பிபிக்கு பாரத ரத்னா கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கங்கை அமரன் கூறியிருப்பதாவது:
"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்திய மொழிகளில் அனைத்திலும் பாடிப் பெருமை பெற்ற நிலையில், அவரது இழப்பு என்பது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது. ‘பாரத ரத்னா’ விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், எஸ்பிபிக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். அனைத்து மொழிகளிலும் பாடியுள்ள பாலுவுக்கு நிச்சயம் ‘பாரத ரத்னா’ விருது கிடைக்கும்".
இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.