

பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர் நாகேஷ் என்று கமல் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று (செப்டம்பர் 27) தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகர் நாகேஷின் 87-வது பிறந்த தினமாகும். அவர் மறைந்துவிட்டாலும், நகைச்சுவைக் காட்சிகள், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அவருடைய நடிப்பு இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடனான நினைவுகளைப் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
நாகேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
கமலின் பல பேட்டிகளில் நாகேஷின் நடிப்புத் திறமையைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசியுள்ளார். மேலும், அவருடைய பெரும்பாலான படங்களில் நாகேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.