

எஸ்பிபி உடனான நினைவலைகளை, '180' இயக்குநர் ஜெயேந்திரா தனது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி உடனான நினைவலைகளைப் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
எஸ்பிபி உடனான நினைவலைகள் குறித்து இயக்குநர் ஜெயேந்திரா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"சில வருடங்களுக்கு முன் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும், மேலாளராகவும் இருந்த விட்டல் காலமானார். எனக்கு விட்டலைத் தெரியும் என்பதால் அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். அதே நேரத்தில் வெளியூரிலிருந்து எஸ்பிபியும் வந்திருந்தார். விட்டலின் வீட்டுக்கு வழி சொன்னதோடு என்னை வீட்டுக்கு உள்ளே சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வரச் சொல்லி சாலையில் காத்திருந்தார். நான் வெளியே வந்த பிறகு என் கார் வரை உடன் வந்து நான் கிளம்பும் வரை இருந்துவிட்டுப் பின் உள்ளே சென்றார்.
நான் உள்ளே சென்ற அதே நேரத்தில் அவரும் வந்திருந்தால் விட்டல் குடும்பத்தினரின் கவனம் அவர் பக்கம் திரும்பியிருக்கும். என்னால் ஒழுங்காக அஞ்சலி செலுத்தியிருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். எனவே, தனது நெருங்கிய நண்பனை இழந்துவிட்ட துக்கத்தில் இருந்தாலும், நான் முடிக்கும் வரை காத்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு மனிதரைத்தான் நாம் இழந்துவிட்டோம்.
அற்புதமான பாடகர் மட்டுமல்ல, மனிதரும் கூட. இவரைப் போல இன்னொரு மனிதரை நாம் சந்திப்போமா என்பது சந்தேகமே.
2003-ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக நடந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி பாடினார். அது மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கான நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், தனிப்பட்ட முறையில் தானும் அதற்கு நிதி தர வேண்டும் என்று எஸ்பிபி நினைத்தார். எனவே, அந்த நிகழ்ச்சிக்கான அவரது மொத்த சம்பளத்தையும் அறக்கட்டளைக்குக் கொடுத்தார். பொன் மனம் கொண்ட மனிதர்".
இவ்வாறு இயக்குநர் ஜெயேந்திரா தெரிவித்துள்ளார்.