பாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

எஸ்பிபி மறைவை முன்னிட்டு, பிரபல பாடகி பி.சுசீலா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

தற்போது எஸ்பிபி உடன் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ள பி.சுசீலா வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:

"எஸ்பிபி இவ்வளவு சீக்கிரம் இறப்பார் என யாருமே நினைக்கவில்லை. 6 மொழிகளில் கிட்டத்தட்ட 3000 டூயட் பாடல்களை நானும் அவரும் இணைந்து பாடியிருப்போம். அதற்கு மேலேயும் கூட இருக்கலாம். பாடல் பதிவின்போது நானும் அவரும் ரொம்ப ஜாலியாக உற்சாகமாகப் பாடியுள்ளோம்.

எஸ்பிபி எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். என் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்தது போன்ற உணர்வைத் தருகிறது. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படியொரு நிலை அவருக்கு வரும் என யாரும் நினைக்கவில்லை.

ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். பாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம். அதை எல்லாம் நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. அனைவரும் மனதைத் திடமாக வைத்துக் கொள்ளுங்கள். பாலு ஆன்மா நல்லபடியாகச் சாந்தி அடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்".

இவ்வாறு சுசீலா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in