அசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது: யேசுதாஸ் உருக்கம்

அசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது: யேசுதாஸ் உருக்கம்
Updated on
2 min read

அசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது என்று யேசுதாஸ் பேசியுள்ளார்.

யேசுதாஸ் - எஸ்பிபி இருவரையும் நண்பர்கள் என்று சொல்வதா, சகோதரர்கள் என்பதா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கும். யேசுதாஸ் பற்றிப் பல மேடைகளில் மிகப் பெருமையாகப் பேசியிருப்பார் எஸ்பிபி.

அதேபோல் அவ்வப்போது யேசுதாஸ் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார் எஸ்பிபி. மேலும், சென்னையில் யேசுதாஸுக்குப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாத பூஜை செய்து ஆச்சரியப்படுத்தினார். அந்த அளவுக்கு யேசுதாஸ் - எஸ்பிபி இருவருக்குமிடையே நெருங்கிய பந்தம் உண்டு.

எஸ்பிபி காலமான நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யேசுதாஸ். ஏனென்றால், அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

அந்த வீடியோவில் யேசுதாஸ் மிக உருக்கமாக எஸ்பிபி பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை எவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஒரு அம்மா வயிற்றில் பிறக்கவில்லை. ஆனால் கூடப் பிறந்தவர் போலப் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்பிபியும் சகோதரர்களாக இருந்திருக்கலாம்.

பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார். 'சங்கராபரணம்' படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாகப் பாடியிருப்பார். அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை எனக் கூறமாட்டார்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

'சிகரம்' படத்தில் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு" என்ற பாடலைப் பாலுவுக்குப் பரிசாகப் பாடினேன் என்று கூறுவார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

பாரிஸில் நாங்கள் தங்கியபோது சாப்பாடு கிடைக்கவில்லை. அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் எனக் குரல் மாற்றிக் கிண்டல் செய்தார். பின்பு அனைவருக்கும் அவரே சமைத்துப் பகிர்ந்தார். அவ்வளவு பசியில் அந்தச் சாப்பாடு ருசியாக இருந்தது. எல்லோரும் வயிறாரச் சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாகப் பாடியது ஒரு சிங்கப்பூர் கச்சேரியில்தான்.

பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கோவிட் காலத்தில் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து அங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், மேடையில் பாலுவும் நானும் ஒரு ஓரமாகச் சிரித்துக் கொண்டிருப்போம். அப்படிப் பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்”.

இவ்வாறு யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in