

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் அர்ஜுன் பேசும்போது, "எத்தனையோ ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். தாயின் மணிக்கொடி, மலரே மெளனமா என எவ்வளவோ பாடியிருக்கிறார். அவர்தான் இந்த நூற்றாண்டின் பாடகர். இந்தப் பாடகருக்குக் கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எஸ்பிபி மறைந்தவுடன் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இசையுலகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஆரோக்கியமாக வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்தோம். பாலு சார் இனி இல்லை என்பது ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத உண்மையாக இருக்கிறது. சிறந்த பாடகர், மனிதர்.
1970-களில் உள்ள நடிகர்களிலிருந்து இப்போதுள்ள இளம் நடிகர்கள் வரை எல்லோருக்கும் பாடியிருக்கிறார். நடிகராக இருக்கும்போது பாலு சார் ரெக்காடிங் இருக்கிறது என்றால் ஷூட்டிங் கேன்சல் செய்துவிட்டுப் போய்விடுவேன். அந்த அளவுக்கு அவருடைய ரசிகன்.
நான் இயக்குநரானவுடன் எனது படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தாயின் மணிக் கொடி தாயின் மணிக்கொடி சொல்லுங்க ஜெய்ஹிந்த் பாடல் அனைவருக்கும் பிடிக்கிறது என்றால், அந்தப் பாடலுக்கு எஸ்பிபி சார்தான் உயிர் கொடுத்தார் " என்று பேசியுள்ளார் அர்ஜுன்.