

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 25ம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி.பி. குறித்து நடிகர் மோகன் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
’’இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. நம்முடைய எஸ்.பி.பி. சார் நம்முடன் இல்லை. இதைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளைத் தேடவேண்டியிருக்கிறது. தேடினாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது.
அப்போதெல்லாம் ரேடியோ இருந்த காலம். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எம்.எஸ். சுப்ரபாதம் மாதிரி எங்களுக்கெல்லாம் அவருடைய குரல் இருந்தது. அங்கே நின்றுநின்று கேட்போம். அவ்வளவு இனிமையாக இருக்கும் எஸ்.பி.பி.யின் குரல்.
காலேஜ் போக ஆரம்பித்த பிறகு, அவர் பாடல்கள் இடம்பெற்ற படங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதில் அவர் குரல் இருக்கும். அவர் பாடியிருப்பார்.
எனக்கு எல்லா மொழி நண்பர்களும் இருந்ததால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு மொழிப் படங்களுக்குச் செல்வோம். அப்படியொரு பழக்கம் எங்களுக்கு. அவருடைய குரல் அபரிமிதமான குரல். அற்புதமான குரல். என்ன, எப்படியென்பதெல்லாம் தெரியாது. அப்படியொரு குரல் அவருக்கு.
பிறகு சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் அவருடைய குரல். அவருடைய குரலுக்கு நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. அது என்னுடைய பாக்கியம். எத்தனை ஆயிரம் பாட்டுக்கள்... எவ்வளவு தலைமுறைக்கு அவருடைய குரல். ஒரு முழுமையான பாடகர் அவர். எந்தவிதமான பாடலாக இருந்தாலும் நூறு சதவிகித பர்ஃபெக்ஷன். எந்த மொழியாக இருந்தாலும் நூறு சதவிகித பர்ஃபெக்ஷன். மிகப்பெரிய ஜீனியஸ் எஸ்.பி.பி.சார்.
இவை எல்லாவற்றையும் விட மிக உன்னதமான மனித நேயம் கொண்டவர். அப்படியொரு மனிதத்தை அவரிடம் பார்த்திருக்கிறேன். அருமையான மனிதர். சென்ஸ் ஆஃப் ஹ்யூமர். அவரைப் பற்றி என்ன சொல்வது. எப்படிச் சொல்வது.
எத்தனையோ ஆயிரம் பாட்டுகள் பாடியிருக்கிறார். அந்தக் குரலுக்கு கொஞ்சம் கூட அயர்ச்சியே தெரியவில்லை. ஆனால் அந்த உடலுக்கு எதற்கு டயர்ட்னெஸ் ஆச்சு? எதனால் டயர்ட் ஆகிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை.
அவருடன் பழகிய நாட்கள், அவருடைய குரல்... அவருடைய குணம்...’’ என்று சொல்லமுடியாமல், கண்ணீர் விட்டு நா தழுதழுக்க வீடியோவைத் துண்டித்துவிட்டார் மோகன்.