

எஸ்பிபி - இளையராஜா - பாரதிராஜா என்ற மூன்று நண்பர்கள் வளர்ந்த கதையைப் படமாக்க விரும்புவதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜாவும், இயக்குநர் பாரதிராஜாவும்தான். மூவருமே திரையுலகில் ஒன்றாக நீண்ட காலமாகப் பயணித்தவர்கள்.
எஸ்பிபி முதலிலேயே பாடகர் ஆகிவிட்டாலும் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகப் பல விஷயங்களில் உதவியிருக்கிறார். இதனை பாரதிராஜா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது எஸ்பிபி - இளையராஜா - பாரதிராஜா மூவரின் நட்பை வைத்துப் படமெடுக்க விரும்புவதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பல விஷயங்களின் கலவைதான் துக்கம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதிலும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை இழக்கும்போது, இனி வாழ்நாள் முழுவதும் அந்த நபர் இல்லாமல் வாழ வேண்டுமே என்ற பதற்றம் வரும்போது இருக்கும் துக்கம். அதை இப்போது உணர்கிறேன். நிலாவே போய் வா.
என் அபிப்ராயத்தில், எஸ்பிபி - இளையராஜா - பாரதிராஜா என்ற, போராடிக்கொண்டிருந்த மூன்று நண்பர்களும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வளர்ந்தது என்பது மிக அற்புதமான ஒரு கதை. அந்தக் கதையை என்றாவது திரையில் சொல்லும் ஆசை எனக்குள்ளது”.
இவ்வாறு சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.