

எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் எஸ்பிபியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எஸ்பிபியின் மரணம் நாட்டின் கலைத்துறைக்கும், இசைத்துறைக்கும் பேரிழப்பாகும். மண்ணுலகில் பாடியது போதும் என விண்ணுலகத்தினர் அவரை அழைத்துக்கொண்டனரோ என்று தோன்றுகிறது.
எஸ்பிபியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்கள், கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
இதேபோன்று தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவும், “எஸ்பிபியின் மரண செய்தியை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் விட்டு போன இடத்தை யாராலும் நிரப்பஇயலாது. அவரின் ஆன்மா சாந்திஅடைய வேண்டு மென எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, “16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேல் திரைப்பாடல்கள் பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, “எஸ்.பி.பியை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோன்று தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி,வெங்கடேஷ், நாகார்ஜுனா, மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஏராளமான மொழிகளில் பாடி மகிழ்வித்த அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடல்களைப் பாடிவந்த அவரின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தாரும் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.