

திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராக நடிகர் எஸ்.வி.சேகர் இருக்கிறார். இவரது வீடு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் குற்றங்கள் மற்றும் இலங்கை தமிழ் பெண் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டது குறித்து 'போர்க்களத்தில் பூ' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு உறுப்பினராக இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இசைப்பிரியா மரணம் குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை தமிழ் ஆதரவாளர்கள் எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது வீட்டின் அருகிலும் கும்பலாக சென்றுள்ளனர். எனவே, தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் அவரது வீட்டுக்கும், எஸ்.வி.சேகருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.