சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது: எஸ்பிபி உடல்நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி

சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது: எஸ்பிபி உடல்நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி
Updated on
1 min read

சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது என்று எஸ்பிபி உடல்நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பினார். இதனிடையே நேற்று (செப்டம்பர் 24) எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மீண்டும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு திரையுலகினர் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (செப்டம்பர் 25) காலை அவருடைய குடும்பத்தினர், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். மேலும், மருத்துவமனை இப்போது போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. நான் ஒரு எமோஷனலான ஆள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய பாடகன், நல்ல மனிதன், அற்புதமான நண்பன். உலகமெங்கும் மக்கள் பிரார்த்தனை பண்ணினோம். எழுந்து வருவான் என எதிர்பார்த்தோம். ஆனால், பலன் கிடைக்கவில்லை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லாருடைய முடிவும் அதன் கையில் தான் இருக்கிறது. இந்த உலகில் யாரும் சின்னவனும் இல்லை, பெரியவனும் இல்லை. இன்னும் சின்னதாய் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவனை மாதிரி ஒரு அற்புதமான மனிதனைப் பார்க்க முடியாது. துக்கத்தில் பேட்டியளிக்க முடியாது. வார்த்தைகள் வராது. இந்த துக்கத்தை எந்த விதத்தில் பகிர்ந்துகொள்வது எனத் தெரியவில்லை".

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in