

மலேசியாவில் உள்ள படப்பிடிப்பு காட்சிகளை குறைத்து, சென்னையிலேயே அரங்கில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராக இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.
முதலில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டது. தற்போது திட்டத்தை மாற்றி சென்னையிலே முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் சென்னை EVP மற்றும் ஆதித்யா ராம் ஸ்டூடியோ ஆகிய இரண்டு படங்களிலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து வருகிறது படக்குழு.
இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "மலேசியாவில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தால், பொருட்செலவும் அதிகமாகும். அதை ரஜினி சார் விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்பதை பார்க்க சொன்னார்.
அதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு, மலேசியாவில் படமாக்கப்பட இருந்த காட்சிகளில் வெளியே எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை மட்டுமே அங்கு படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம். இங்கேயே மலேசியா பாணியில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்த இருக்கிறோம்.
மேலும், ஒவ்வொரு படப்பிடிப்பு அரங்கிலும் இருந்து ரஜினி சார் அவருடைய வீட்டுக்கு சென்று வர நேரம் அதிகமாகும். ஆகையால், அங்கேயே ரஜினி சார் தங்குவதற்கு என்று பிரத்யேகமாக அறை ஒன்று தயாராகி வருகிறது." என்று தெரிவித்தார்கள்.
மலேசிய போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி?
இப்படத்துக்கான போட்டோ ஷுட் நடைபெற்ற போது, மலேசிய போலீஸ் அதிகாரி போன்றும் ரஜினியை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். ரஜினி அப்படத்தில் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் தோன்ற இருக்கிறாரா அல்லது போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறாரா என்பது விரைவில் தெரியவரும்.