

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு இயக்குநர் சேரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்குக் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (செப்டம்பர் 23) நாடாளுமன்ற சுற்றுப்புற வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, இந்த வேளாண் மசோதாக்களுக்கு நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"விவசாயிகளின் மீதும் விவசாயத்தின் மீதும் திணிக்கப்பட்டிருக்கும் பேராபத்தான தனியார் நிறுவன ஆதிக்க வியாபார முறை குறித்த மசோதாவை எதிர்க்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். விவசாயத்திற்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் துணைபோகக் கூடாது"
இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.