தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேரன் நன்றி

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேரன் நன்றி
Updated on
1 min read

தனது படங்களைத் தொடர்ச்சியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி சேரன் இயக்கத்தில் வெளியான படம் 'பாண்டவர் பூமி'. அருண் விஜய், ஷமிதா, ராஜ்கிரண், ரஞ்சித், விஜயகுமார், சார்லி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேற்று (செப்டம்பர் 21) இந்தப் படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை முன்னிட்டு சேரன் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனால், இயக்குநர் சேரன் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார். தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இறுதியாக, தனது ட்விட்டர் பதிவில் சேரன் கூறியிருப்பதாவது:

" 'பாண்டவர் பூமி' வெளியான போது 75 நாட்கள்தான் ஓடியது. பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. 2001-ல் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன் தொலைக்காட்சி இன்றுவரை 200 தடவைக்கு மேல் ஒளிபரப்பியதன் விளைவே இன்று அனைத்து மக்களையும் சென்றடைந்திருக்கிறது. நன்றி சன் குழுமம்.

அதேபோல எனது 'வெற்றிக்கொடி கட்டு', 'சொல்ல மறந்த கதை' திரைப்படங்களும் அனைத்து மக்களையும் சென்றடைந்து இதுவரை கொண்டாடப்படக் காரணம் சன் தொலைக்காட்சிதான். அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பட்டியலில் இம்மூன்று திரைப்படங்களும் இருக்கின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியே. குடும்பங்கள் காணும் தொலைக்காட்சியில் இப்படங்கள் ஏற்படுத்தும் நன்மதிப்பு மகத்தானது.

அதேபோல ஜெயா தொலைக்காட்சி - 'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து', கலைஞர் தொலைக்காட்சி - 'பொக்கிஷம்', 'மாயக்கண்ணாடி', ஜீ தமிழ் - 'திருமணம்', ராஜ் டிவி - 'பொற்காலம்', 'தேசியகீதம்' என எனது எல்லாப் படைப்புகளையும் தொலைக்காட்சிகளே இன்றும் மக்களிடம் பேசவைக்கின்றன. இதை மறுக்க இயலாது.

அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் நன்றி. அதில் பார்த்து என் போன்ற இயக்குநர்களைப் பாராட்டி மகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் நன்றி. இதை உணர்ந்து தொலைக்காட்சிகள் நல்ல திரைப்படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in