

தனது பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திகேயாவின் ட்வீட்டால், அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது.
தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட் நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு. இதனிடையே, இந்தப் படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கார்த்திகேயா, ஹுயூமா குரேஷி நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
நேற்று (செப்டம்பர் 21) கார்த்திகேயா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களும் கார்த்திகேயாகவுக்கு பிரத்யேக போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய பிறந்த நாளில் அதீத அன்பைப் பொழிந்த தல அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. நான் கடினமாக உழைத்து நம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்ததை விட ஒரு அப்டேட் வரப்போகுது. என்ன நா சொல்றது".
இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
கார்த்திகேயாவின் இந்த ட்வீட்டின் மூலம், அவர் 'வலிமை' படத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.