

"பன்னீர்செல்வம் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, 'பாயும்புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனால் புதுப்படங்கள் வெளியீடு இல்லை" என தயாரிப்பாளர் சங்கம் நேற்று (செப்டம்பர் 2) மாலை அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் இன்று (செப்டம்பர் 3) காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
"நான் எந்த ஒரு தயாரிப்பாளரையும் மிரட்டவில்லை. 'லிங்கா' பெரும் நஷ்டமானதைத் தொடர்ந்து, ரஜினி சார் முன்வந்து கொடுத்த பணத்தில் மீதமுள்ள பணம் 2.75 கோடி தாணுவிடம் இருக்கிறது. அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணத்தின் கணக்குகளை கடந்த 3 மாதங்களாக கேட்டு வருகிறோம். இதுவரை கொடுக்கவில்லை. அப்பணத்தை வைத்துக் கொண்டு 'லிங்கா' படத்தால் நஷ்டமடைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு சேர வேண்டிய பணம் அது. அப்பணத்தை கொடுங்கள் என கேட்கிறோம்.
'லிங்கா' படத்தின் தமிழக உரிமையை ஈராஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நிறுவனம் வேந்தர் மூவிஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'பாயும் புலி' வெளியாகும் சமயத்தில் அப்பணத்தை கொடுங்கள் என கேட்பது எப்படி தவறாகும். மேலும், எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைத் தானே கேட்கிறோம். சேர வேண்டிய பணத்தைக் கேட்டால் எப்படி மிரட்டியதாக கூற முடியும். நாங்கள் எந்த ஒரு திரையரங்கு உரிமையாளரையும் 'பாயும் புலி' படத்தைப் போடாதீர்கள் என கூறவில்லை. அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். நஷ்டமடைந்தவர்களூக்கு தான் அந்த வேதனை தெரியும்.
முதலில் 'லிங்கா' விவகாரத்தில் ரஜினி சார் பணம் கொடுத்தது நஷ்டமடைந்தவர்களுக்குத் தான். அப்பணம் ஏன் தாணு கைக்கு போனது? மேலும் தாணு தான் ரஜினி சாரிடம் "இனிமேல் நீங்கள் நடிக்கக்கூடிய படம் வெளிவர வேண்டும் என்றால் நான் இருந்தால் தான் முடியும். என்னால் முடிந்தால் தான் படம் வெளியாகும்" என மிரட்டி தேதிகள் பெற்றுக் கொண்டவர்தான் தாணு. ஒரு வாரத்துக்கு முன்பையும், நேற்று எனது மகளிடம் உனது அப்பா சரியில்லை என மிரட்டியவர் தாணு. அவர் மீது போலீஸில் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
மேலும், என் மீது போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்கள். புகார் கொடுக்கட்டும், நானும் கொடுக்கிறேன். போலீஸார் விசாரித்து நான் மிரட்டினே என்று நிரூபித்தால் எந்த தண்டனை என்றாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
அதேபோல தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பது போல, படங்கள் எல்லாம் திரையிடாமல் எல்லாம் இருக்க மாட்டோம். கண்டிப்பாக அனைத்து படங்களும் வெளியாகும். தாணு தமிழ் திரையுலகை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், அவரிடம் இருந்து மீட்டு தமிழ் திரையுலகை காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம்