

டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று, சென்னை விமான நிலையத்தில் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சர்வதேச முனைய வருகைப் பகுதியில் 'கபாலி' படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களில் உள்ள ரஜினியின் தோற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரியாது என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனைய வருகைப் பகுதி ஒன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் டெல்லியில் தான் அனுமதி வாங்க வேண்டும்.
'கபாலி' படப்பிடிப்பை அங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டு, அனுமதி கோரப்பட்டது. ரஜினி படம் என்றவுடன் அவர்களும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இதற்காக பெரும் தொகையை முன்பணமாக தயாரிப்பு நிறுவனம் செலுத்தியிருக்கிறது.
பூட்டியே கிடந்த இடத்தில் ஆட்கள் கூட்டமாக இருந்ததால் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்களுக்கே மதியத்திற்கு மேல் தான் 'கபாலி' படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது என்று தெரிந்திருக்கிறது.
காலை 11 மணிக்கு ரஜினி வந்தவுடன், அவரும் தன்ஷிகாவும் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திறங்குவது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போதே சிலர் அதனை மொபைலில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார்கள்.
மதியம் 1 மணிக்கு ரஜினி கிளம்பிய உடன், மாலை 4 மணிக்கு மற்றவர்களை வைத்து சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.