

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' திரைப்படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் 'மாமனிதன்'. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து 'மாமனிதன்' படம் தொடர்பாக எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. அவ்வப்போது இயக்குநர் சீனு ராமசாமி மட்டும், படத்தின் இசைப் பணிகள் குறித்து ட்வீட் செய்திருந்தார். மேலும், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தக் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்க வெளியீட்டில் சிக்கல் இருப்பதால், 'மாமனிதன்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்று பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
பல ஓடிடி தளங்களுடன் பேசியிருப்பதால், இன்னும் எந்த ஓடிடி தளத்தில் வெளியீடு என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
தற்போது விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' படம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து 'மாமனிதன்' படமும் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.