போலி நபர்களை நம்ப வேண்டாம்: அஜித் தரப்பு எச்சரிக்கை

போலி நபர்களை நம்ப வேண்டாம்: அஜித் தரப்பு எச்சரிக்கை
Updated on
1 min read

போலி நபர்களை நம்ப வேண்டாம் என்று அஜித் தரப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

எந்தவொரு சமூக வலைதளத்திலும் அஜித் கிடையாது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என அஜித் எதற்கும் வருவதும் கிடையாது. இதனால் அவ்வப்போது அஜித்தின் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். அவ்வாறு சமூக வலைதளத்தில் போலியான அஜித் கணக்கு, அஜித் கையெழுத்து உள்ளிட்டவை தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து அறிக்கை விடப்பட்டது.

தற்போது மீண்டும் அஜித் பெயரைச் சிலர் அரசாங்க அலுவலக விவகாரங்களில் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது அஜித்துக்குத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளன.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

மேலும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பிலிருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்"

இவ்வாறு அஜித்தின் சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in