

'இது நம்ம ஆளு' படம் சம்பந்தமாக நயன்தாரா மீது அளித்தது புகார் அல்ல என்று சிம்பு தெரிவித்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. 'வாலு' பிரச்சினைகள் அனைத்து முடிந்தவுடன் 'இது நம்ம ஆளு' பணிகள் முடிந்து வெளியிடப்படும் என்று சிம்பு தெரிவித்திருந்தார்.
'வாலு' வெளியானதைத் தொடர்ந்து, 'இது நம்ம ஆளு' பாடல்களைக் காட்சிப்படுத்த நயன்தாராவிடம் தேதிகள் கேட்டு தரவில்லை என்பதால் டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
'இது நம்ம ஆளு' விவகாரத்தில் நடந்தது என்ன என்று சிம்புவிடம் கேட்ட போது, "முதல் விஷயம் நயன்தாரா மீது புகார் என்ற வார்த்தையே தவறு. நாங்கள் புகார் அளிக்கவில்லை.
'இது நம்ம ஆளு' படத்தில் இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. அதற்காக நயன்தாராவிடம் தேதிகள் கேட்க யாரை அணுகவது என்று தெரியவில்லை. ஆகையால் தயாரிப்பாளர் சங்கத்திடம் "நீங்கள் நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். நாங்கள் உங்களிடம் மீதி கொடுக்கப்பட இருக்கும் சம்பளத்தை உங்களிடம் கொடுக்கிறோம். நீங்கள் கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் இதை ஒரு கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள், எழுதி கொடுத்தோம். இது தான் நடந்தது.
'வாலு' படத்துக்காகவும் ஹன்சிகாவிடம் தேதிகள் கேட்டோம் கொடுத்தார், பாடல்கள் படமாக்கப்பட்டு வெளியானது. அதே போல, நயன்தாரா தேதிகள் கொடுத்தால் பாட்டு படப்பிடிப்பு முடித்து, படத்தில் சேர்த்து வெளியாகும். இல்லையென்றால் பாடலே இல்லாமல் படம் வெளியாகும்.
ஒரு பெரிய நடிகர், நடிகை நடித்திருக்கும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை பூர்த்தி செய்யும் வகையில் படத்தில் பாடல் இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.