

டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2020இல் திரையிடுவதற்குத் தேர்வான படங்களில் இயக்குநர் ரா.பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’, இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற பேர் சொல்லும் திரைப்படங்களோடு அருண்குமார் செந்தில் தயாரித்து இயக்கிய ‘காபி கஃபே’ திரைப்படமும் திரையிடப்பட்டது பெருமையான தருணம். காரணம், வெகுஜன சினிமாவிலிருந்து விலகி, ஒரு திருநங்கை கதாபாத்திரத்தை முதன்மையான கதாபாத்திரமாகக் கொண்டு, பொதுச் சமூகத்துக்கான ஒரு திரைப்படமாக உருவாக்கியதில் கவனம் ஈர்த்த திரைப்படம் ‘காபி கஃபே’.
இந்தத் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருநங்கை சுதா, “LGBT மற்றும் பால் புதுமையருக்கான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் முக்கியத்துவம் ‘காபி கஃபே’ திரைப்படத்துக்கு, பொது திரைப்பட விழாவிலும் கிடைத்திருப்பது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பலவிதமான இன்னல்களுக்கு இடையில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கி அதை டொரண்டோ திரைப்பட விழாவுக்குக் கொண்டுசேர்த்திருக்கும் இயக்குநர் அருண்குமார் செந்திலின் முயற்சி அசாத்தியமானது” என்றார்.
கனடாவில் நடந்த இந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருதை ‘ஒத்த செருப்பு’, ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படங்களோடு ‘காபி கஃபே’ திரைப்படமும் வென்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் அறிமுகக் காட்சி கடந்த ஜனவரியில் தாகூர் திரைப்பட கல்லூரி அரங்கத்தில் திரையிடப்பட்டது.
‘காபி கஃபே’ கதைக் களம்
காபி கஃபே ஒன்றை நடத்திக்கொண்டே மரபையும் நவீனத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் நாடகத்தை மேடையில் நிகழ்த்தும் வேட்கையோடிருக்கும் வினோதினி, அந்த காபி ஷாப்பில் துப்புரவுப் பணியாளர் திருநங்கை காவேரி, சுயாதீன திரைப்பட இயக்குநர் செந்தில், இருக்கும் கொஞ்ச நாளில் நினைத்தபடி வாழ்வோம் என்னும் மனநிலையில் வாழும் இளம்பெண் பூஜா.. இந்த நால்வரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைதான் ‘காபி கஃபே’ திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண்குமார் செந்தில். ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், கதையின் முக்கியமான கண்ணியாகப் படம் முழுவதும் பயணித்திருக்கிறார் காவேரியாக நடித்திருக்கும் திருநங்கை சுதா.
சமூகத்தில் திருநங்கைகளைத் தள்ளிவைத்துப் பார்க்காமல் அவர்களும் சமூகத்தில் ஓர் அங்கம்தான் என்பதை எந்தவிதமான பிரச்சார நெடியும் இல்லாமல் காட்டியிருப்பதில் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.
சமூகரீதியான ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதிலிருந்து ஓர் உயிரைக் காப்பாற்றும் பணியில் இந்த நால்வரும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்குச் சிலரின் உதவியும் கிடைக்கிறது. அந்த உயிர் காப்பாற்றப்பட்டதா என்பது பரபரப்பான காட்சிகளாக விரிகிறது ‘காபி கஃபே’ படத்தின் கிளைமேக்ஸ்.