

'தனி ஒருவன்' படத்துக்கு அதிகப்படியாக விளம்பரங்களுக்கு செலவு செய்ததால், ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் (தடை விதிப்பு) போட்டுள்ளது.
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற படம் 'தனி ஒருவன்'. மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படம் வெளியான போது முன்னணி தொலைக்காட்சி, நாளிதழ்கள், எப்.எம்கள் என அனைத்திலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தியது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் சில தினசரிகள் மற்றும் தொலைக்காட்சியில் மட்டுமே விளம்பரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
'தனி ஒருவன்' படத்துக்காக பெரியளவில் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போட்டுள்ளது. இனிமேல் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறது.
இதனால், ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி "'தனி ஒருவன்' படத்தின் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க தடை விதித்திருக்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.