

'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'வெற்றி வேல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வந்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவுற்றது. சசிகுமார் நாயகனாக நடித்தது மட்டுமன்றி தயாரித்தும் வந்தார். சசிகுமாரின் அடுத்த படம் உடனே துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கும் புதிய படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சசிகுமார். இப்படத்தை அறிமுக இயக்குநர் வசந்தமணி இயக்கவுள்ளார். இவர் 'ஜில்லா' இயக்குநர் நேசனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படத்துக்கு 'வெற்றி வேல்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் இணைந்து நடிக்க இருக்கிறார். நாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்துக்கான பாடல்களை ஏற்கனவே இமான் முடித்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கி இருக்கிறது.