வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய கவிதாலயா நிறுவனம்

வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய கவிதாலயா நிறுவனம்
Updated on
1 min read

முன்னணித் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம், வெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாலசந்தர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. இந்நிறுவனம், 1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியது.

அதற்குப் பிறகு 'மணல் கயிறு', 'நான் மகான் அல்ல', 'அச்சமில்லை அச்சமில்லை', 'சிந்து பைரவி', 'புன்னகை மன்னன்', 'வேலைக்காரன்', 'புதுப்புது அர்த்தங்கள்', 'அண்ணாமலை', 'ரோஜா', 'முத்து', 'சாமி', 'திருமலை', 'ஐயா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. இறுதியாக பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'திருவண்ணாமலை' படத்தை 2008-ம் ஆண்டு தயாரித்தது.

படத் தயாரிப்பு மட்டுமல்லாது டிவி சீரியல்களையும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் யுகத்திலும் முதல் அடி எடுத்து வைத்தது கவிதாலயா நிறுவனம்தான். 'ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு தயாரித்தது.

தற்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றையும் அமேசான் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளது. 'டைம் என்ன பாஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் 'டைம் என்ன பாஸ்' வெப் சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் இயக்குநர் யார் என்ற தகவலை அமேசான் நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், "காலப் பயணம் செய்யக்கூடிய ரூம்மேட்களுடன் நீங்கள் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்?" என்று குறிப்பிட்டு அமேசான் நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த வெப் சீரிஸ் டைம் டிராவல் பற்றியதாக இருக்கும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in