

'பாயும் புலி' படத்தின் செங்கல்பட்டு ஏரியாவுக்கான வெளியீடு பிரச்சினையை, திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி விஷால் தீர்த்து வைத்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்திருக்கும் 'பாயும் புலி' திரைப்படம் செப்.4-ம் தேதி வெளியாகி இருக்கிறது. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
'லிங்கா' படத்துக்காக இன்னும் பணம் வரவில்லை என்பதால் செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் 'பாயும் புலி' படத்தை வெளியிடவில்லை. திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் "நாங்கள் யாரையும் படத்தைப் போடாதீர்கள் என்று சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை" என்று தெரிவித்திருந்தார்.
செப். 3ம் தேதி இரவு 'பாயும் புலி' படம் வெளியாகும் திரையரங்குகளின் பெயர்களோடு போஸ்டர் வெளியிடப்பட்டது. அப்போஸ்டரில் காசி, வெற்றி, மாயாஜால் உள்ளிட்ட முக்கியமான திரையரங்குகள் பெயர் எதுவுமே போஸ்டரில் இல்லை. இது 'பாயும் புலி' படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.
பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பில் இருந்த விஷால், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அப்பேச்சுவார்த்தை அதிகாலை 3 மணி வரை நீண்டு இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு தான் செங்கல்பட்டில் இருக்கும் திரையரங்குகள் தங்களுடைய திரையரங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள்.
விஷாலின் இந்த பேச்சுவார்த்தையால் மட்டுமே, செங்கல்பட்டில் படம் வெளியாகி இருப்பதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.