Published : 13 Sep 2020 21:40 pm

Updated : 13 Sep 2020 21:58 pm

 

Published : 13 Sep 2020 09:40 PM
Last Updated : 13 Sep 2020 09:58 PM

நவரச நாயகன் கார்த்திக்.. அவருடைய இடம் அவருக்கே!  - நடிகர் கார்த்திக் பிறந்தநாள் ஸ்பெஷல்

actor-karthik-birthday

முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செய்துவிடுகிற காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ என்று முத்திரை குத்திவிடுவார்கள் ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே, ‘சாக்லெட் பாய்’ என்று ரசிக்கத் தொடங்கினார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘ஆக்‌ஷன் ஹீரோ’ வாகவும் ஏற்றுக் கொண்டார்கள். இப்படி சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே, ‘ஆக்டிங் பிரமாதம்’ என்றும் புகழ்ந்தார்கள். இப்படி எல்லாவிதமாகவும் பண்ணக்கூடிய நடிகர் என்று பேரெடுப்பது அத்தனை சுலபம் அல்ல. அப்படி எளிமையில்லாத விஷயத்தை மிக எளிமையாகப் பெற்று தனியிடம் பிடித்தவர்... கார்த்திக்.

நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் நமக்கு அறிமுகமானார். ஆனால், ‘கார்த்திக் அப்பா யாரு தெரியும்ல. நடிகர் முத்துராமன்’ என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் தெரிந்தார். கார்த்திக்கின் வெற்றியின் ஆரம்பம் அப்படித்தான் அமைந்தது.


‘நடிக்க வந்தது விபத்து’ என்று சிலர் பேட்டி கொடுப்பார்கள். உண்மையில், ஒரு விபத்தில்தான் இயக்குநர் பாரதிராஜாவின் கண்ணில் பட்டார் முரளி. ஆமாம்... கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. பாரதிராஜா காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக சிராய்த்துக்கொண்டான். அவனை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக்கொண்டிருந்த பையனைப் பார்த்தார். அதுவரை, அடுத்தநாள் ஷூட்டிங் செல்லவேண்டிய அந்தப் புதிய படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கவில்லை. பையனைப் பார்த்ததும் உற்சாகமானார். ‘முத்துராமனின் மகன்’ என்று அறிந்ததும் அன்றிரவே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில், குமரிமாவட்டத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு வரச்செய்தார். முரளி... கார்த்திக் ஆனார். அன்றில் இருந்து திரைத்துறையில் தொடங்கியது கார்த்திக்கின் அலை ஓயவே இல்லை. அந்தப் படம்... ‘அலைகள் ஓய்வதில்லை’ என்பது யாருக்குத்தான் தெரியாது.

அதேசமயம், அதுதான் கார்த்திக்கின் முதல் படம் என்று சொன்னால், இன்றைய தலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். விச்சு எனும் கதாபாத்திரமாகவே வார்த்திருப்பார் பாரதிராஜா. வாழ்ந்திருப்பார் கார்த்திக். இளையராஜாவின் சொந்தப் படம் வேறு. எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த ராதாவுக்கும் அதுதான் முதல்படம்.
அடுத்தடுத்து படங்கள் வந்தன. ராம.நாராயணன் ரொம்பவே கார்த்திக்கைப் பயன்படுத்தினார். எம்ஜிஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி, கமல் - ஸ்ரீதேவி ஜோடி போல, கார்த்திக் - ராதா ஜோடி கொண்டாடப்பட்டது. ஆனாலும் கார்த்திக் - ரேவதி, கார்த்திக் - அம்பிகா, கார்த்திக் - பானுப்ரியா, கார்த்திக் - ஜீஜீ, கார்த்திக் - குஷ்பு, கார்த்திக் - சுஹாசினி, கார்த்திக் - சசிகலா, கார்த்திக் - ரம்பா, கார்த்திக் - நக்மா, கார்த்திக் - நிரோஷா, கார்த்திக் - ஜீவிதா... என எல்லா ஜோடியும் பேசப்பட்டது.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போவார் கார்த்திக். எந்த ஹீரோயினாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘ஊமைவிழிகள்’ படத்தின் ‘மாமரத்துப்பூவெடுத்து’ பாடலையும் கார்த்திக்கையும் அப்படி ரசித்தார்கள். ‘கோபுர வாசலிலே’வின் காதலுக்கு தவிக்கும் கதாபாத்திரத்தையும் நண்பர்களின் துரோகத்தால் புழுங்கி தவிப்பதையும் அட்டகாசமாக செய்திருப்பார்.

ஸ்ரீதரின் ‘நினைவெல்லாம் நித்யா’ தோல்விப்படம்தான். ஆனாலும் அத்தனை பாடல்களாலும் நம் மனக்கண்ணில் கார்த்திக் நின்றுகொண்டிருக்கிறார். இப்படியான தருணத்தில்தான் இயக்குநர் பாசில், ‘வருஷம் 16’ படத்தில் கண்ணன் கேரக்டரைக் கொடுத்தார். ‘கார்த்திக்கைத் தவிர வேறு யாரும் இந்தக் கேரக்டரைப் பண்ணிருந்தா நல்லாருக்காது’ எனும் பெயர் அநேகமாக அப்போதுதான் கிடைக்க ஆரம்பித்தது அவருக்கு.

மிக அற்புதமாக, கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தார். ‘பாண்டி நாட்டு தங்கம்’, ‘சொல்லத்துடிக்குது மனசு’, ‘நாடோடி பாட்டுக்காரன்’ என்று கார்த்திக்கின் படங்களும் ஹிட்டு. பாடல்களும் அமர்க்களம். படமும் நூறுநாள், இருநூறு நாள். இந்தசமயத்தில் ‘பொன்னுரங்கம்’ வந்தார். கார்த்திக்கின் இன்னொரு ’கிழக்கு வாசல்’ திறந்தது. இன்னும் பிரகாசமானார். ‘பொன்னுரங்கமாகவே’ வாழ்ந்தார். துறுதுறு சுறுசுறு கிராமத்து இளைஞன். இதே துறுதுறு சுறுசுறு கேரக்டர்... மணிரத்னம் கொடுத்தார். இரண்டரை மணி நேரப் படத்தில், இருபது நிமிடம்தான் வருவார். அந்த இருபது நிமிட நடிப்பில், இன்றைக்கும் நம் மனதில் தனியிடம் பிடித்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார். அந்த ‘மிஸ்டர் சந்திரமெளலி மிஸ்டர் சந்திரமெளலி’க்கு இணை ஏதுமே இல்லை. இந்தியில் எடுக்கும் போது, அந்த நடிகர் கூட இதைத் தொடமுடியவில்லை.

சிவாஜியின் மைந்தன் பிரபுவும் முத்துராமன் மைந்தன் கார்த்திக்கும் மோதிக்கொண்ட ‘அக்னி நட்சத்திரம்’ இன்னொரு அனல் கனல். ஆர்.வி.உதயகுமாரின் ‘கிழக்கு வாசல்’ போலவே ‘பொன்னுமணி’யும் ‘நந்தவனத்தேரு’வும் அவரின் நடிப்புக்கு பொன்னாகவும் மணியாகவும் கட்டியம் கூறின.

‘அமரன்’, ‘இதயத்தாமரை’ என்றும் பண்ணினார். சுந்தர்.சி.யின் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’ என்றும் கே.எஸ்.ரவிகுமாரின் ‘பிஸ்தா’விலும் காமெடியிலும் அதகளம் பண்ணினார் கார்த்திக்.'தெய்வவாக்கு’ படத்திலும் அட்டகாசமான கேரக்டரை, அநாயசமாகச் செய்திருந்தார்.

இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’ கார்த்திக்கின் வேற லெவல் நடிப்பு. படம் முழுக்க போதையும் கொஞ்சம் தெளிவுமாகவே பிரமிப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் ‘வசந்தமாளிகை’ சிவாஜிக்குப் பிறகு ‘கோகுலத்தில் சீதை’யில் அப்படியொரு கேரக்டர். கோட்டும் சூட்டுமாக, பெருந்தனக்காரரராக கார்த்திக் நடிப்பு பிரமாண்டம். விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ செல்வம் கேரக்டர், கார்த்திக்கின் திரை வாழ்வில் இன்னொரு ஏணி. மற்றுமொரு உயரம். அநாயச நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அள்ளிக்கொண்டார். ’சந்தித்த வேளை’யில் டபுள் ரோலை வெகு அழகாகச் செய்திருப்பார். ’சின்ன ஜமீன்’ படத்தில் அப்பாவியாக நடித்து தூள்பண்ணியிருப்பார்.

கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் டியாக்‌ஷன்... இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.

எண்பதுகளில் தொடங்கிய கார்த்திக்கின் பயணத்தில்... ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள். அன்றைய காலகட்டத்தில், கார்த்திக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள். கார்த்திக் செய்த படங்களெல்லாம் வெரைட்டி, பியூட்டி கேரக்டர்கள். அவரைப் போலவே அவரின் ஹேர் ஸ்டைலும் அழகு. அப்போது அவரின் படத்தை வைத்துக் கொண்டு, சலூன் கடைக்குச் சென்று முடி வெட்டிக் கொண்ட ரசிகர்களும் உண்டு.

’அலைகள் ஓய்வதில்லை’யில் தொடங்கிய கார்த்திக்கின் அலை, இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் அறுபது ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கமுடியாது. மறக்கவே முடியாது.

இன்னும் கார்த்திக் எனும் அற்புத நடிகரின் இடம் காலியாகவே... அவருக்காகவே!

நவரச நாயகன் கார்த்திக்கின் 60-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 13).

கார்த்திக்கை வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!


நவரச நாயகன் கார்த்திக்.. அவருடைய இடம் அவருக்கே!  - நடிகர் கார்த்திக் பிறந்தநாள் ஸ்பெஷல்கார்த்திக்நடிகர் கார்த்திக்அலைகள் ஓய்வதில்லைமெளன ராகம்அக்னி நட்சத்திரம்கோபுர வாசலிலேஅமரன்கிழக்கு வாசல்கோகுலத்தில் சீதைActor karthikActor karthik birthday

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author