Published : 12 Sep 2020 14:31 pm

Updated : 12 Sep 2020 14:38 pm

 

Published : 12 Sep 2020 02:31 PM
Last Updated : 12 Sep 2020 02:38 PM

வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: திரை வாழ்விலும் மணிவிழா கொண்டாட வாருங்கள் வடிவேலு 

vadivelu-special-article

சென்னை

1990-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இரண்டு புயல்கள் மையம்கொண்டன. ஒருவர் 1991-ல் வெளியான 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் அறிமுகமான வைகைப்புயல் வடிவேலு. இன்னொருவர் 1992-ல் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமான 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இவ்விரண்டு புயல்களும் தமிழர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றனர். அவர்களை அனைத்து விதமான கவலைகளிலிருந்தும் மீளச் செய்திருக்கின்றனர். பல அரிய சாதனைகளை நிகழ்த்தி தமிழ்ச் சமூகத்தைப் பெருமிதம் கொள்ளச் செய்திருக்கின்றனர். ஒருவர் நகைச்சுவையால் இன்னொருவர் இசைச்சுவையால். இவ்விருவரில் நகைச்சுவைப் புயலான வடிவேலு இன்று (செப்டம்பர் 12) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சிகரமான சாதனை


மதுரை மண்ணைச் சேர்ந்த வடிவேலு அறிமுகமான காலகட்டம் ரஹ்மானுடன் பொருந்துகிறது. ரஹ்மான் தமிழ் இசையில் சர்வதேசத் தரத்தைப் புகுத்தினார். வடிவேலுவோ சர்வதேசமும் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட உலகமயமாக்கல் காலத்தில் தன் தனித்தன்மைமிக்க நகைச்சுவையாலும் அசாத்திய திறமையாலும் தமிழ் நகைச்சுவைப் பாரம்பரியத்தின் புகழை பன்மடங்காக்கியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்கென்று ஒரு தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவைப் பாணியும் பாரம்பரியமும் இருப்பதை உலகில் மக்களுக்குத் துல்லியமாக உணர்ந்துகொள்வதற்கான நகைச்சுவையை அள்ளிக்கொடுத்தார் வடிவேலு. ரஹ்மான் சர்வதேச இசைச் சாதனையின் உச்சங்களில் ஒன்றான ஆஸ்கரை வென்றவர் என்றால் வடிவேலு தான் இயங்கும் தமிழ்ச் சமூகத்தின் அனைவருடைய வாழ்விலும் கேளிக்கைக்காரராக, அன்றாடக் கவலைகளிலிருந்து ஆசுவாசம் அளிப்பவராக, சமூக அவலங்களை அரசியல் பிரச்சினைகளைப் பகடி செய்யப் பயன்படும் மீம்களுக்கு உள்ளடக்கங்களை வாரி வழங்குபவராக ஏதேனும் ஒரு வகையில் கலந்திருக்கிறார். இதுவும் ஒரு சிகரமான சாதனைதான்.

உடலைப் பயன்படுத்தும் கலை

எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தமது தனிப் பாணியில் நகைச்சுவை விருந்து படைத்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். அரசியல் பகடி, சமூக அவலங்களைச் சாடுதல் என அறிவுசார்ந்த நகைச்சுவைப் பாணியிலும் ஸ்லாப்ஸ்டிக் என்று சொல்லப்படும் அறியாமை, முட்டாள்தனம், உள்ளிட்ட மனிதத் தவறுகள் தன்னையறியாமல் நிகழும் நகைச்சுவைப் பாணியிலும் சாதித்த நகைச்சுவைக் கலைஞர்கள் பலர் உள்ளன. இவை இரண்டிலும் வெற்றிகரமாக இயங்கியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தோற்றத்தையும் உடல்மொழியையும் ஆகச் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் வடிவேலுக்கு ஈடு இணை இல்லை. தலைமுடி, மீசையின் அளவு, என அனைத்தும் அவருடைய நகைச்சுவைக்குப் பங்களிக்கும். மீசை இல்லாமல் ஒட்டுமீசை வைத்துக்கொள்வதையும் பென்சிலால் மீசை வரைந்துகொள்வதையும் வைத்துக்கூட ரசிக்கத்தக்க நகைச்சுவைக் காட்சிகளைத் தந்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கேற்ற உடல்மொழி. நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார். உடலை நடிப்புக்குப் பயன்படுத்துவதில் எந்த நட்சத்திர நடிகருக்கும் விருதுகளை வாரிக் குவித்த நடிகருக்கும் சளைத்தவரல்ல வடிவேலு.

மக்களின் கலைஞன்

இது மட்டுமல்ல. சைக்கிளில் டீ விற்பவர், பிணம் எரிக்கும் தொழிலாளி, பேருந்து நடத்துநர், ஆட்டோ ஓட்டுநர், கொரியர் நிறுவனம் நடத்துபவர் என எளிய மக்களைப் பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரங்களையும் எளிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் நகைச்சுவை வடிவில் சொன்னவரும் வடிவேலுதான். அதே நேரம் உயர் தட்டு ரசிகர்களாலும் அவருடைய நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது. எளிய மக்களின் பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் சொல்வதன் மூலம் எளிய மக்களின் வாழ்க்கை குறித்து உயர் வர்க்க மக்களுக்குப் புரியவைக்கவும் வடிவேலுவின் நகைச்சுவை பயன்பட்டிருக்கிறது.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தன் அபார நகைச்சுவைத் திறனால் சென்றடைந்த வடிவேலு அனைத்து தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் செயல்படுகிறார். கடைக்கோடி கிராமம் முதல் பெருநகரம் வரை வாழும் அனைத்து நிலைகளிலும் வாழ்பவருக்கும் வடிவேலுவுடன் தொடர்புப்படுத்திக்கொள்ள அவருடைய நகைச்சுவையை ரசிக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அதுவே அவரை அசலான மக்கள் கலைஞனாக ஆக்குகிறது. இந்த அரிதான மகுடத்தை வடிவேலுவைத் தவிர ஒரு சிலருக்கு மட்டுமே சூட்ட முடியும்.

காரணம் தெரியா இடைவெளி

1990-களில் படிப்படியாக வளர்ந்து 90-களின் பிற்பகுதியிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் இன்றியமையாக் கலைஞராக உயர்ந்தார். 80-களில் இளையராஜாவுக்காக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்திருந்ததுபோல் 2000-களில் வடிவேலுவுக்காகக் காத்திருந்தார்கள். போஸ்டரில் அவருடைய பெயரும் முகமும் இருப்பதே திரையரங்குக்கு மக்களை அழைத்துவந்தது.

வடிவேலுவின் அந்தப் புகழ் துளியும் குறைந்துவிடவில்லை. சொல்லப்போனால் இன்னும் அதிகரித்திருக்கிறது. 2011-க்குப் பிறகு இன்னது என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாத பல காரணங்களால் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 15-20 படங்களில் நடித்து வந்தவர் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தமாகவே 15-க்குக் குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்துக்கும் குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறார்.

படங்கள் குறைந்தாலும் அழியாப் புகழ்

வடிவேலு இல்லாத காலகட்டத்தில் அவருக்கு அடுத்து வந்த எண்ணற்ற நகைச்சுவைக் கலைஞர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். வடிவேலுக்குச் சென்றிருக்க வேண்டிய வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனாலும் வடிவேலுவின் இடம் அப்படியேதான் இருக்கிறது. அவருடைய மறுவருகைக்காக மக்கள் பெரிதும் ஏங்கிக்கிடக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர் வெள்ளித்திரையில் தலைகாட்டுவது அரிதினும் அரிதானதாகிவிட்டாலும் யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவரே நீக்கமற நிறைந்திருக்கிறார்.

நகைச்சுவையாகவும் பகடியாகவும் கருத்துகளைப் பகிர்வதற்கான அதி நவீன வடிவமான மீம்கள் வடிவேலு இல்லாமல் இவ்வளவு பரவலாகியிருக்க முடியாது என்று சொல்லலாம். மீம்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளப் பதிவுகளிலும் அன்றாட வாழ்க்கை உரையாடல்களிலும்கூட வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் ஊடுருவிவிட்டன. 'உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?", "மண்டபத்ரம்" போன்ற வசனங்கள் தேசிய அளவிலான அரசியல் நிகழ்வுகளுக்கு விமர்சன வடிவில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வலுவான ஆயுதமாகப் பயன்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சுத்தியல் படத்தைப் போட்டு இது என்ன என்று ஒருவர் கேட்க ஒரு குறும்புக்கார வடிவேலு ரசிகர் 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழுந்து அவர் மயங்கி விழும் நகைச்சுவையுடன் தொடர்புப்படுத்தி அதற்கு பதில் சொல்ல 'ப்ரே ஃபார் நேசமணி' அது அனைத்து தரப்பிலும் பரவி 'ப்ரே ஃபார் நேசமணி' என்னும் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. இன்றும் இந்த ட்ரெண்ட்டுக்குப் பிறகு 'காண்ட்ராக்டர்' என்பதை தம் பெயருக்கு முன் அடைமொழியாகச் சூடிக்கொண்டிருப்பவர்களை ட்விட்டரில் காணலாம்.

தடைகள் நீங்க வேண்டும்

இவை எல்லாம் வடிவேலு என்னும் மக்கள் கலைஞன் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழிக்க முடியா தாக்கத்தையும் அவரை தொடர்ந்து திரையில் காண மக்கள் எவ்வளவு ஏங்கியிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. அண்மைக் காலங்களில் வடிவேலு நடித்த ஒரு சில படங்கள் அவருடைய நகைச்சுவைத் திறன் துளியும் வலுவிழந்துவிடாமல் இருப்பதை ஆங்காங்கே பளிச்சிட வைத்தாலும் அவருடைய இன்மை குறித்த ஏக்கத்துக்கான வடிகாலாக அமையவில்லை.

'தேவர் மகன்' படத்தின் மூலம் வடிவேலுவுக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த கமல் ஹாசன் தயாரித்து நடிக்கவிருக்கும் 'தலைவன் இருக்கிறான்' திரைப்படத்தில் அவருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பணியாற்றவிருக்கிறார் வடிவேலு. இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி பலரது வயிற்றில் பாலை வார்த்தது என்றாலும் இந்தப் படம் தொடங்க தாமதம் ஆகும் போலத் தெரிகிறது. ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்கத் தொடங்கிய 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் பல்வேறு பிரச்சினைகளாலும் பிணக்குகளாலும் தடைப்பட்டு நிற்கிறது.

இந்த எல்லா பிரச்சினைகளும் நீங்க வேண்டும். வடிவேலு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைவேற இனியும் தாமதமாகக் கூடாது. வடிவேலு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் சூழலும் அமையப்பெற வேண்டும். அவரும் அதற்குத் தேவையான மனமாற்றத்தை அடைய வேண்டும். எல்லா விதமான தடைகளை மீறி தன் ஆட்டத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.

இன்று 60 வயதைத் நிறைவு செய்து தனிவாழ்வில் மணி விழா கொண்டாடும் வடிவேலு திரை வாழ்விலும் பொன்விழாவும் மணிவிழாவும் கொண்டாட வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!


வடிவேலுவடிவேலு பிறந்த நாள்வடிவேலு பிறந்த நாள் ஸ்பெஷல்வடிவேலு ஸ்பெஷல்வடிவேலு ஸ்பெஷல் கட்டுரைவடிவேலு சிறப்புக் கட்டுரைவடிவேலு குறித்த கட்டுரைOne minute newsVadiveluHappy birthday vadiveluVadivelu birthdayVadivelu special articleVadivelu article

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author