

அண்ணன் வெங்கட்பிரபு இல்லையென்றால் நான் ஹீரோ இல்லை, வெறும் ஜீரோ தான் என நடிகர் பிரேம்ஜி தெரிவித்தார்.
பிரேம்ஜி அமரன், அத்வைதா, லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'மாங்கா'. பிரேம்ஜி இசையமைத்து நடித்திருக்கும் இப்படத்தை சக்திவேல் தயாரித்திருக்கிறார். செப்டம்பர் 11ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் பிரேம்ஜி அமரன் பேசியது, "என்னுடைய 'சென்னை 28' நண்பர்களின் முதலில் யார் தனி நாயகனாக ஆகுறார்கள் என பார்க்கலாம் என பந்தயம் வைத்தோம். அனைவருமே தனி நாயகனாக ஆகிவிட்டார்கள். நான் தான் கடைசியாக ஆகியிருக்கிறேன். நான் நாயகனாக நடிக்க 9 வருடம் ஆகியிருக்கிறது.
என்னுடைய முகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள காரணம் எனது அண்ணன் தான். அவன் இயக்கும் பெரிய நாயகர்களின் படங்களில் என்னை நடிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட்டான். அவன் இல்லையென்றால் நான் ஹீரோ இல்லை, ஜீரோ தான்.
'மாங்கா' படத்தில் 2015ல் வரும் விஞ்ஞானியாகவும், 1950ல் வரும் பாகவதராகவும் நடித்திருக்கிறேன். இப்படத்துக்கு முதலில் நிறைய நாயகிகள் என்னுடன் நடிக்க தயங்கினார்கள். நான் நாயகனாக நடித்து பெரியளாக ஆனவுடன் என்னுடைய அக்கா, அம்மா வேடத்தில் அவர்களை நடிக்க வைத்து பழிவாங்குவேன்.
நான் பார்ட்டிக்கு போவதைப் பற்றியே அனைவரும் எழுதுவதால் யாரும் பொண்ணு தர மாட்டேன் என்கிறார்கள். எனது அண்ணன் தற்போது தீவிரமாக எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். " என்று தெரிவித்தார் பிரேம்ஜி.