பாலாஜி இடத்தை நிரப்ப வேறு யாருமே கிடையாது: சேது உருக்கம்

பாலாஜி இடத்தை நிரப்ப வேறு யாருமே கிடையாது: சேது உருக்கம்
Updated on
1 min read

பாலாஜி இடத்தை நிரப்ப வேறு யாருமே கிடையாது என்று நடிகர் சேது உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 'அது இது எது', ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி (43). உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (செப்டம்பர் 10) காலமானார்.

சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, விஜய் தொலைக்காட்சியில் அவரோடு பணிபுரிந்த ரோபோ ஷங்கர், ராமர், மணிமேகலை, 'சிரிச்சா போச்சு' டீம் உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் சேது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"பாலாஜி இடத்தை நிரப்ப வேறு யாருமே கிடையாது. என்னுடன் பல நாடுகளுக்கு பயணித்து காமெடி செய்திருக்கிறார். அவரை மாதிரி டைமிங்கில் காமெடி செய்வது வேறு யாராலும் முடியாது. நிறைய பேர் ஸ்கிரிப்ட் எல்லாம் கொடுக்கும் போது, ஸ்கிரிப்ட் எல்லாம் வேண்டாம் நான் பண்றேன் எனத் தைரியமாகப் பண்ணக்கூடிய ஒரு நடிகர்.

எங்கும் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போதுமே சிரித்துக் கொண்டே இருக்கிற ஒரு கரெக்டர். எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய இழப்பு. குடும்பத்தில் ஒரு சகோதரரை இழந்த மாதிரி உணர்கிறேன். எங்கம்மாவின் இழப்புக்கு அழுததிற்குப் பிறகு இன்று தான் அழுதேன்.

இன்றைக்கு நிறைய மேடைக் கலைஞர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். கடந்த 6 - 7 மாதங்களாக எந்தவொரு வேலையுமே இல்லாமல் மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். அரசாங்கமோ, தொலைக்காட்சியோ எதுவும் செய்யவில்லை. இந்த மாதிரியான நேரத்தில் மேடைக் கலைஞர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். இதற்குப் பிறகு இந்த மாதிரி ஒரு கலைஞனை இழந்துவிடக் கூடாது"

இவ்வாறு நடிகர் சேது தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in