

கடவுள் மீது சில நேரம் கோபம் வருகிறது என்று வடிவேலு பாலாஜியின் இறப்பு குறித்து ரோபோ ஷங்கர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 'அது இது எது', ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி (43). உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (செப்டம்பர் 10) காலமானார்.
சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, விஜய் தொலைக்காட்சியில் அவரோடு பணிபுரிந்த ரோபோ ஷங்கர், ராமர், மணிமேகலை, 'சிரிச்சா போச்சு' டீம் உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ரோபோ ஷங்கர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"எல்லோருடனும் அன்பாகப் பழகக்கூடிய ஒரு கலைஞன். மாப்ள, மாமா என்று அழைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமான குடும்பம். கிட்டதட்ட 19 ஆண்டுகள் அவனோடு பயணித்திருக்கிறேன். பல மேடைகள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என ஒன்றாக சுற்றி, சாப்பிட்டு, தூங்கியிருக்கிறோம். அந்தளவுக்கு அன்னியோனமாக இருந்த வடிவேல் பாலாஜியின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மரணம்.
இங்கு வந்து பார்க்கும் போது தான் எத்தனை பேரோடு பழகியிருக்கிறான் என்பது தெரிகிறது. ஒட்டுமொத்த டான்ஸர்ஸ், நடிகர்கள், நண்பர்கள் என கண்ணீர் விட்டுப் போகும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. கடவுள் மீது சில நேரம் கோபம் வருகிறது. கடவுளுக்கு ஏன் இந்த உயிரை எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏன் எனத் தெரியவில்லை.
அவன் இருந்திருந்தான் என்றால் எத்தனை பேரை சிரிக்க வைத்திருப்பான். அவன் உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவோ நல்ல விஷயங்கள் செய்திருப்பான். பிணவறையில் வேலை பார்த்து இந்தளவுக்கு உயர்ந்த கலைஞன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம், இந்த சோகத்தை ஈடுகட்டவே முடியாது. இன்னொரு வடிவேல் பாலாஜி எங்களுக்குக் கிடைப்பானா என்பது தெரியவில்லை"
இவ்வாறு ரோபோ ஷங்கர் உருக்கமாகப் பேசினார்.