

அசோக் செல்வன் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு அசோக் செல்வனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அனி சசி இயக்கி வரும் புதிய படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்தி வர்மா ஆகியோருடன் நடித்து வருகிறார் அசோக் செல்வன். அந்தப் படம் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருந்தார் அசோக் செல்வன். இந்தப் படத்தின் தொடக்கத்தில் நிஹாரிகா நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். இப்போது அவருக்கு திருமணம் முடிவாகியிருப்பதால், இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார்.
தற்போது நிஹாரிகாவுக்கு பதிலாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா மற்றும் படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.