Published : 11 Sep 2020 20:12 pm

Updated : 11 Sep 2020 20:12 pm

 

Published : 11 Sep 2020 08:12 PM
Last Updated : 11 Sep 2020 08:12 PM

’உலகே மாயம் வாழ்வே மாயம்’, ’துணிந்தபின் மனமே..’ தோற்ற காதலை சொல்லி ஜெயித்த ‘தேவதாஸ்’ - 67 ஆண்டுகளாகியும் மறக்கவே முடியாத காதல் காவியம்

67-years-of-devadas

தொந்நூறுகளின் மத்தியில், காதல் குறித்த படங்கள் வரிசையாக வந்துகொண்டே இருந்தன. பார்த்த காதல், பார்க்காமலே காதல், பேசும் காதல், பேசாத காதல், சொல்லிய காதல், சொல்லாத காதல் என்று ஒவ்வொரு விதமாக காதலை மையமாகக் கொண்டு கதை பண்ணினார்கள். ‘காதல் கோட்டை’க்குப் பின்னர், பல படங்களின் தலைப்பிலும் கதையிலும் காதல் நிச்சயம் இடம்பெற்றது. காதலை வேறொருவிதமாகச் சொன்ன ‘காதல்’ திரைப்படம், முற்றிலும் வேறுபட்டு நின்றது.

இதற்கும் முன்னதாக, எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில், டி.ராஜேந்தரின் ‘ஒருதலைராகம்’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில், கல்லூரியும் புதுசு. மெளனமான, பேசிக்கொள்ளவே பேசிக்கொள்ளாத காதலும் புதுசு. ‘ஒருதலைராகம்’ என்று படத்தின் பெயரைச் சொல்லும்போதே, அந்த சோகத்தின் தாக்கம், அப்போதைய இளைஞர்களின் நெஞ்சில் இறுக்கத்தை உண்டுபண்ணும், இப்போதும்!


அறுபதுகளில் வந்த ‘கல்யாண பரிசு’ படம் வெளியான போது ஏற்படுத்திய சலனம், இன்றைய தாத்தா பாட்டிகளுக்கு இப்போதும் உண்டு. அந்தக் காலத்தில், காதலில் தோல்வியுற்றவர்கள், வேறொருவரை அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும்... தோல்வியுற்றவர்கள், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்றுதான் பெயர் வைத்தார்கள். வசந்தி... ‘கல்யாண பரிசு’ படத்தில் சரோஜாதேவியின் பெயர். இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த ‘கல்யாண பரிசு’ அன்றைய காதல் தோல்வியாளர்களுக்கு ஸ்ரீதர் தந்த காதல் பரிசு என்றே சொன்னார்கள். இத்தனைக்கும் ஸ்ரீதரின் முதல் படம் இது.

ஐம்பதுகளிலும் ஒரு காதல் படம் வந்தது. அதை வெறும் படம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. மூன்று மணி நேர பொழுதுபோக்குப் படம் என்று சாதாரண பட்டியலில் சேர்த்துவிட முடியாது. அந்தப் படத்தை காவியம் என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் தென்னிந்திய ரசிகர்கள். ஆந்திராவிலும் தமிழிலும் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தப் படம். அது... ‘தேவதாஸ்’.

‘என்னப்பா... அந்தப் பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டிருந்தானே, இப்ப என்னாச்சு?’ என்று கேட்டால், அந்தக் கேள்விக்கு, ‘அதை ஏம்பா கேக்கறே. காதல் புட்டுக்கிச்சு. அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பண்ணிவைச்சிட்டாங்க. பாவம் இந்தப் பையன். தேவதாஸ் மாதிரி தாடியை வளர்த்துக்கிட்டு திரியுறான்’’ என்று பதில் வரும்.

‘தேவதாஸ்’ என்ற அந்தப் படம் செய்த தாக்கம், இன்றைக்கும் தொடர்கிறது. காதலில் தோல்வியுற்றால், இளைஞன் தாடி வைத்து திரிவான் என்று காதலுக்கும் காதல் தோல்விக்கும் தாடியை அடையாளமாகக் காட்டிய ‘தேவதாஸ்’, திரையுலகின் ஆகச்சிறந்த காதல் காவியம்.

‘காதலர்கள் சேரணுமே சேரணுமே... என்கிற தவிப்பு, படம் பார்க்கிற ரசிகர்களுக்கு வரணும். அய்யோ... லவ் ஜோடி சேரலியே... என்று படம் பார்க்கிறவர்கள், கண்ணீர்விடணும். காதலர்கள் சிரித்தால் சிரிக்கணும், அழுதால் அழணும். அப்படி நடந்தா, அந்தப் படம் வெற்றி’ என்று சினிமா வட்டாரத்தில் சொல்லுவார்கள். ‘தேவதாஸ்’ படம் அப்படியொரு சிரிப்பையும் அழுகையையும் ரசிகர்களுக்குக் கடத்தியது. இந்தப் படத்தை, அந்தக் காலத்தில், ஒரேயொரு முறை மட்டும் பார்த்தவர்கள் மிகக்குறைவு.

ஒரு கதை எப்படிப் பண்ணவேண்டும், அந்தக் கதைக்கான திரைக்கதை எப்படி வடிவமைக்க வேண்டும், கதையின் மாந்தர்கள் உணர்வுபூர்வமான இடங்களில் எந்த வார்த்தைகளைக் கொண்டு பேசவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த ரோல்மாடல் படமாக அமைந்தது ‘தேவதாஸ்’ திரைப்படம்.

1953ம் ஆண்டு வெளியானது ‘தேவதாஸ்’ திரைப்படம். நம் நாகார்ஜூனாவின் அப்பா நாகேஸ்வரராவ், நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருந்தார்கள். அதை நடிப்பு என்றே நம்பவில்லை ரசிகர்கள். நிஜமாகவே ஒரு காதல் ஜோடியின் பெருஞ்சோகம் என்றே கவலை கொண்டார்கள். கதறியழுதார்கள். இதிலொரு ஆச்சரிய அதிர்ச்சி... காதலிக்காத ரசிகர்கள் கூட , ‘தேவதாஸ்’ பார்த்துவிட்டு, சோகத்தில் மூழ்கினார்கள். ரங்காராவின் நடிப்பும் அற்புதம்.

தேவதாஸும் பார்வதியும் காதலிக்கத் தொடங்குவது, காதலிப்பது, காதலிக்கும் போது அவர்களுக்குள் நிகழ்கிற எதிர்கால ஆசைகள், கனவுகள், எப்படியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை... ஆனால் விதி பிரித்துக் கலைத்துப் போடுகிறது. வயதானவருக்கு பார்வதியைத் திருமணம் செய்து வைத்துவிட காதலியைக் கரம் பிடிக்காத சோகத்திலும் காதலியின் வாழ்வு நாசமாகிவிட்டதே என்ற துயரத்திலும் நொந்து போகிறான் தேவதாஸ். உருக்குலைந்து போகிறான். படம் பார்க்கிறவர்கள் எல்லோருமே குலைந்து, குமுறி, கதறினார்கள்.

இளையராஜா, எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் போல் அன்றைய இசையுலகின் சூப்பர் ஸ்டார்... சி.ஆர்.சுப்பராமன். இவரின் இசையில், எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வெற்றி என்பதோடு அல்லாமல், பாடல் ஏற்படுத்திய தாக்கம், காதலின் வலியையும் பிரிதலையும் இன்னும் இன்னுமாக நமக்குள் புகட்டின. கண்டசாலாவின் குரலைச் சொல்லவும் வேண்டுமா? துக்க வீரியத்தைத் தூக்கிக்கொண்டு சுமக்கிற குரல் அது.

‘ஓ ஓ தேவதாஸ்... ஓ ஓ பார்வதி’ என்ற பாடல் இன்றைக்கும் பிரபலம். உடுமலை நாராயணகவி எழுதியது. பாலசரஸ்வதியும் ராணியும் பாடியிருந்தார்கள். ‘துணிந்தபின் மனமே துயரங்கொள்ளாதே’ என்ற பாடலை தொந்நூறுகளில் கூட பல சினிமாக்களில் டீக்கடைகளில் ஒலிபரப்புவது போல் காட்டினார்கள்.

’அன்பே பாவமா’ என்றொரு பாடல். நம்மை அழவைத்துவிடும். கே.டி.சந்தானம் பல பாடல்களை எழுதியிருந்தார். ‘எல்லாம் மாயை’ என்ற பாடலும் அப்படித்தான். அவர் எழுதிய ‘கனவிதுதான்’ பாடலைக் கேட்டால், அன்றிரவு தூக்கம் போச்சு நமக்கு. ‘உலகே மாயம்... வாழ்வே மாயம்’ என்ற பாடலை உடுமலையார் எழுத, கண்டசாலா பாடியிருந்தார். மூன்றரை நிமிடப் பாட்டு. ஆனாலும் பாடலைக் கேட்ட பிறகு, பலநாள் நம் மனதை நிமிண்டிக்கொண்டே இருக்கும்.

சி.ஆர்.சுப்பராமன் இசையில், வேதாந்தம் ராகவையா இயக்கிய இந்த ‘தேவதாஸ்’ படம், எல்லா மொழிகளிலும் ஹிட்டடித்தது. நாகேஸ்வரராவ், இந்தப் படத்துக்குப் பின்னர் இன்னும் உயரம் தொட்டார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் சாவித்திரியின் அற்புத நடிப்பைக் கண்டு மிரண்டது. அவரை போட்டிபோட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்தார்கள். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து நடிகையாக வலம் வந்தார். ‘நடிகையர் திலகம்’ என்று எல்லோரும் கொண்டாடிப் போற்றும் வகையில், உச்சத்துக்குச் சென்றார். விரக்தியில் கலங்கும் நாகேஸ்வரராவையும் மறக்கமுடியாது. அவருக்கு அருகில் சோகமே உருவெனப் பார்க்கிற நாயையும் கவனிக்காமல் இருந்துவிடமுடியாது.

அநேகமாக, இந்திய அளவில், ஒரு படம் அதிக அளவில் ரீமேக் செய்யப்படதென்றால், அது... ‘தேவதாஸ்’ படமாகத்தான் இருக்கும். பல மொழிகளில் வெளியானது. பல முறை ரீமேக் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியானது ‘தேவதாஸ்’. தோற்றுப் போன காதலே சரித்திரத்தில் இடம்பெறும் என்பார்கள். தோற்றுப் போன காதலைச் சொல்லி மாபெரும் வெற்றி பெற்ற ‘தேவதாஸ்’ படம் சரித்திரத்தில் இடம்பெறவில்லை. மாறாக, மாபெரும் சரித்திரமாகவே ஆனது!

படம் வெளியாகி 67 ஆண்டுகளாகியும், இன்னும் மக்கள் மனங்களில் ஜெயித்து நிற்கிறது ‘தேவதாஸ்’ காதல்.தவறவிடாதீர்!

’உலகே மாயம் வாழ்வே மாயம்’’துணிந்தபின் மனமே..’ தோற்ற காதலை சொல்லி ஜெயித்த ‘தேவதாஸ்’ - 67 ஆண்டுகளாகியும் மறக்கவே முடியாத காதல் காவியம்தேவதாஸ்நாகேஸ்வரராவ்சாவித்திரிநாகார்ஜுன்நடிகையர் திலகம்கண்டசாலாசி.ஆர்.சுப்பராமன்வேதாந்தம் ராகவையாகாதல் காவியம் தேவதாஸ்67 ஆண்டுகள் தேவதாஸ்தேவதாஸ் வெளியாகி 67 ஆண்டுகள்Devadas67 years of devadas

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author