

மறைந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவருடைய குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டுக் காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, போதிய பணவசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (செப்டம்பர் 10) காலை காலமானார்.
அவருடைய மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நடிகர்கள் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (செப்டம்பர் 11) காலை வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி.
வடிவேலு பாலாஜியின் தாயார் விஜய் சேதுபதியிடம் கதறி அழுதது அனைவரையும் உருக வைத்தது. பின்பு, அவரிடம் நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி. எவ்வளவு நிதியுதவி என்பதை விஜய் சேதுபதியோ அல்லது அவரது தரப்போ வெளியிட மறுத்துவிட்டனர்.
வடிவேல் பாலாஜிக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தி, நிதியுதவி அளித்ததிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.