

தாம் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்த நாயகிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வேண்டும் என்ற முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விரைவில் எடுக்க இருக்கிறது.
தமிழ் திரையுலகில் பல்வேறு பிரம்மாண்ட படங்கள் தயாராகின்றன. படத்தில் நடிப்பதற்காக கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு படத்தின் வெளியீட்டு சமயத்தில் நிகழும் பத்திரிகையாளர் சந்திப்பில் "நாயகி வேறு ஒரு படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் வரவில்லை" என்று தெரிவிக்கும் படக்குழு. இப்படி பல படங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் படத்துக்கான ஒப்பந்தத்தில் படத்தை விளம்பரப்படுத்த இத்தனை நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடுவார்கள். இதனால் விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயம் நாயகிகளுக்கு ஏற்பட்டு விடுகிறது.
சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயா' திரைப்பட வெளியீட்டுக்கு முன்னரும், படம் வெற்றியடைந்த பின்னரும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பங்கேற்கவில்லை. 'மாயா' படத்தை தெலுங்கில் வெளியிட்டிருக்கும் கல்யாண் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். கல்யாண் தான் தற்போதைய பிலிம் சேம்பர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணிடம் "'மாயா' படமே நாயகியை மையப்படுத்திய கதை தான். ஆனால், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்குக் கூட நயன்தாரா வரவில்லையே?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "இனிமேல் வரவிருக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நாயகிகள் யாருமே வராமல் தப்பிக்க முடியாது.
இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். படத்தின் ஒப்பந்தத்தின் போதே விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடவுள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'மாயா' பத்திரிகையாளர் சந்திப்பின்போது நயன்தாரா சேலத்தில் பிரபல துணிக்கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.