

நீண்ட நாட்கள் கழித்து கவுண்டமணி நாயகனாக நடித்திருக்கும் '49-ஓ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சத்யராஜ், சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இசையை வெளியிட, கவுண்டமணி பெற்றுக் கொண்டார்.
இதுவரை கவுண்டமணி நடித்த எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டதில்லை. முதன் முதலாக கவுண்டமணி கலந்து கொண்டதால், இசை வெளியீட்டு விழாவில் பல ரசிகர்களை காண முடிந்தது. சத்யராஜ், சிவகார்த்திகேயன் இருவருடைய காமெடி பேச்சுக்கு பிறகு கவுண்டமணியை பேச அழைத்தார்கள்.
அவ்விழாவில் கவுண்டமணி பேசியது, "சத்யராஜ், சிவகார்த்திகேயன் பேசியதற்கு பிறகு எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. இருவருமே இந்த விழாவுக்கு வந்ததற்கு சந்தோஷம். நிறைய பேர் டாக்டர் பட்டம் ஓரத்தில் நின்று கொண்டு மிகவும் கெஞ்சி வாங்குவார்கள். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன் நான் கேட்காமலேயே எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்னிடம் கதை சொல்ல சுமார் 1 வருடம் அலைந்தார். கதையில் முன்னாலும், பின்னாலும் விட்டுவிடுங்கள் இடையில் இரண்டு வரிச் சொல்லுங்கள் என்றேன். ஆறடி தாய்மடி திட்டம் என்று ஒரு விஷயம் சொன்னார், உடனே நான் இந்தப் படத்தை பண்ணுகிறேன் என்று கூறிவிட்டேன். கமர்ஷியல், குத்துப்பாடல் என படங்கள் வரும் இந்தக் காலகட்டத்தில் தயாரிப்பாளர் இக்கதையை ரசித்து தயாரித்தற்கு ஒரு பாராட்டு. இப்படத்தில் என்னோடு நடித்த அனைவருக்கும் நன்றி.
2 மணி நேரப் படத்தை இப்படத்தின் இரண்டு பாடல் வரிகளில் சொல்லிவிட்டார் பாடலாசிரியர் யுகபாரதி. "விவசாயம் இல்லையென்றால் உலக ஏதுடா.. உயிர் ஏதுடா! பல கட்டிடங்கள் உருவாக வயக்காட்டை அழிச்சாங்க" என்று எழுதியிருக்கிறார். விவசாயம் நமது நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயம் இல்லையென்றால் நாம் உயிரோடு இருக்க முடியாது. விவசாயிகளுக்கு அந்த மண் தான் உடல், உயிர், மானம் எல்லாம். அந்த மண்ணை அவர்கள் விட்டுவிடக் கூடாது. அதில் தான் அவன் விவசாயம் பண்ண வேண்டும்.
ஒரு வருஷம் வெள்ளாமை விளையவில்லை என்றால் நிலத்தை விற்றுவிட்டேன் என சொல்லக் கூடாது. அடுத்த வருஷம் விளையும். இன்று விவசாயிகளை அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள், தொழில் அதிபர்கள் தான் சந்திக்கிறார்கள். ஏனென்றால் எப்படியாவது அவனிடம் இருந்து நிலத்தை வாங்கி அதில் கட்டிடம் கட்டிவிட வேண்டும் என்று தான். அந்த இடத்தில் விவசாயிகள் ஏமாறாக் கூடாது. இப்படி இடத்தை விற்றுக் கொண்டே போனால், நாம் எதைத் தான் சாப்பிடுவது. விளைநிலங்கள் எங்கே இருக்கும். விவசாயிகள் விவசாயிகளாக தான் இருக்க வேண்டும் என்று சொல்கிற படம் தான் இந்த '49-ஓ'.
நம் ஊர் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து ஊர் விவசாயிகளுக்கும் சொல்கிற கதை. இந்திய விவசாயிகளுக்கு மட்டுமன்றி உலக விவசாயிகளுக்கும் இந்த படம் பொருந்தும். வெளிநாட்டுக்காரன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்ணுவான், நம் ஊரில் வேட்டி அணிந்து பண்ணுவார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். உலகத்தில் எந்த மூலையில் உள்ள விவசாயியும் நிலத்தை காப்பாற்ற வேண்டும், அப்போது தான் மக்கள் வாழ முடியும், வயிறாற சாப்பிட முடியும். அதை சொல்கிற படம் தான் '49-ஓ'. ஏ, பி என்று படங்களைப் பிரிப்பார்கள், இந்தப் படம் இஸட் வரைக்கும் பார்க்கலாம். '49-ஓ' ஒரு நல்ல படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
'49-ஓ' என்றால் என்ன, நோட்டா என்றால் என்ன? நாம் யாருக்கு ஓட்டு போடுகிறோம், எதற்கு ஓட்டு போடுகிறோம், ஏன் ஓட்டு போடுகிறோம், இந்த ஓட்டு போடுவதால் நமக்கு என்ன நன்மை, இதை போடலாமா வேண்டாமா இதற்கான விளக்கம் இப்படத்தில் இருக்கிறது” என்று பேசினார் கவுண்டமணி.
"'49-ஓ' ஒரு நல்ல படம், அனைவரும் கண்டிப்பாக பாருங்கோ" என்பதை மறுபடியும் மறுபடியும் பல்வேறு குரல்களில் பேசி சிரிப்பலையில் ஆழ்த்தினார் கவுண்டமணி.