

வடிவேல் பாலாஜி மறைவுக்கு மருத்துவமனை மீது குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் ஆதவன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, போதிய பணவசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 10) காலை காலமானார்.
அவருடைய மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் ஆதவன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"யாரிடமும் முகம் சுளிக்காமல், சிரிக்க வைப்பதை மட்டுமே தன்னுடைய கடமையாக வைத்திருந்தவர் வடிவேல் பாலாஜி. 20-25 நாட்களாக தொடர்ச்சியாக என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். என்ன பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த மாதிரியான நேரத்தில் சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு மட்டும்தான் இன்சூரன்ஸ் கோருவோம். மற்ற நோயாளிகளுக்குப் பண்ணமாட்டோம் என்றார்கள்.
ஒரு நல்ல மருத்துவமனையில்கூட எங்களால் அவரைச் சேர்க்க முடியவில்லை. அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. ஒரு சில பிரச்சினைகள் அவருக்கு இருந்தும் அதைச் சொல்லாமலே அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். அதற்குப் பணம் கட்ட முடியவில்லை என்பதுதான் காரணம். முடிந்த அளவுக்குப் பணம் புரட்டிக் கொடுத்தோம். மீதிப் பணம் கட்ட முடியவில்லை என்பதால் அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதை எங்களிடம் சொல்லவே இல்லை.
பின்பு அரசு மருத்துவமனையில் கண்டுபிடித்து, 3 நாளுக்கு முன்பே இப்படி இருந்துள்ளதே என்று கேட்டார்கள். சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால், இந்த வருத்தம் எனது வாழ்நாள் முழுக்க இருக்கும். இப்படியொரு நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை.
ஏனென்றால் 3 வாரங்களுக்கு முன்பு கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பார்த்தோம். எப்போதுமே பரிச்சயமான ஒரு முகம். எங்களுடனே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு முகம். இந்த மாதிரியான சூழலில் மருத்துவமனைகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்".
இவ்வாறு ஆதவன் தெரிவித்துள்ளார்.