

ரஜினி படத்தை இயக்குவது உறுதியானவுடன், இயக்குநர் ரஞ்சித்தின் செயலைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் 'மெட்ராஸ்' படத்தில் நடித்தவர்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்.17ம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது. ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.
ரஜினி படத்தை இயக்குவது முடிவானவுடன் இயக்குநர் ரஞ்சித், தனது முந்தைய படமான 'மெட்ராஸ்' படத்தில் நடித்த அனைவருக்கும் போன் செய்து "ரஜினி சார் படம் இயக்குவது உறுதியாகி விட்டது. நீங்களும் அப்படத்தில் இருக்கிறீர்கள்" என்று உறுதியளித்திருக்கிறார்.
ரஜினி படம் என்றாலே பெரிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என மிகப் பிரபலமானவர்கள் பணியாற்றுவார்கள். ஆனால், இப்படத்தில் 'மெட்ராஸ்' படக்குழு அப்படியே பணியாற்ற இருக்கிறது.