தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதிலடி

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதிலடி
Updated on
2 min read

தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைகளுக்குத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதிலடிக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியுள்ளார் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

விபிஎஃப் கட்டணம், விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கைகள் தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா

"அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றவில்லை என்றால் படங்களை வெளியிட முடியாது என்கிறார்கள். ஓடிடியில் படங்களை வெளியிடுகிறார்கள், அதற்கு எங்களைக் கேட்டுவிட்டா வெளியிட்டார்கள். இல்லையே.

படங்களை வெளியிடுவது, வெளியிடாததும் அவர்களுடைய சொந்த விருப்பம். அவர்கள் சொந்த பணத்தைப் போட்டு படம் எடுத்துள்ளார்கள். விருப்பப்பட்டால் வெளியிடப்படும், விருப்பமில்லை என்றால் விட்டுவிடட்டும். நாங்கள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்களும் ஐபிஎல் மேட்ச், கல்யாணம் மண்டபம் என மாறிப் போய்க் கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும். அவர்கள் வைத்துள்ள எந்தவொரு கோரிக்கைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது.

தயாரிப்பாளர்கள் விபிஎஃப் பணம் கட்டுகிறார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. Service Providers தான் எங்களுக்கு content கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நேரடியாக content கொடுத்ததே கிடையாது. முதலில் எப்படி பிரிண்ட் முறையில் திரையரங்குகளுக்கு நேரடியாகப் படம் கொடுத்தார்களோ, அதே போல் Service Providers-மும் சொல்லியிருக்க வேண்டியதானே?

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்

படத்தை பிரிண்ட் போடுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் இருந்தது. Service Providers அதை 15 ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். உடனே சந்தோஷமாகத் தயாரிப்பாளர்கள் அங்குக் கொண்டு போய் படத்தைக் கொடுத்தார்கள். இப்போது அந்த 15 ஆயிரம் ரூபாயையும் கட்ட மாட்டோம் என்கிறார்கள்.

இது தமிழ்நாட்டு பிரச்சினையில்லை. இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை. தமிழ்நாட்டில் 400 பிரிண்ட் தான் போடுகிறார்கள். இந்தியில் ஒரு படத்துக்கு 2000 பிரிண்ட் போடுகிறார்கள். அவர்கள் விபிஎஃப் பணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் கட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே அதிசயமாக இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் நன்றாகப் பேசட்டும். விபிஎஃப் கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை. நாங்கள் அந்தக் கட்டணத்தைக் கட்டுங்கள் என்று கட்டாயப்படுத்தவே முடியாது. எங்களுக்கு வரும் content-ஐ திரையிட முடிந்தால் திரையிடுவோம். தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இன்னும் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து, பல மூடப்பட்டுவிடும்.

ஓடிடி தளங்களிலோ, தொலைக்காட்சியிலோ போய் தயாரிப்பாளர்கள் ஜெயித்துவிட முடியாது. தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒரு நடிகரை உருவாக்க முடிந்ததா?. திரையரங்கம் தான் சினிமாவுக்கு முக்கியமான தளம். அங்குப் படங்கள் வெளியிட்டால் மட்டுமே நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்க முடியும்"

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in