Last Updated : 08 Sep, 2020 04:39 PM

Published : 08 Sep 2020 04:39 PM
Last Updated : 08 Sep 2020 04:39 PM

’இதய’நாயகன் முரளி; சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய  வசூல் நாயகன்!  - நடிகர் முரளி நினைவுதினம் இன்று

சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள். ஆனால், எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பவர்கள் மிகச்சிலரே. அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்... முரளி.

கன்னடத் திரையுலகில், சித்தலிங்கையா மிகப்பெரிய தயாரிப்பாளர். எண்ணற்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் என்றாலே, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். பின்னாளில், தன்னுடைய மகன், தமிழில் இந்த அளவுக்கு மிகப்பெரிய நடிகராக வருவார் என்றோ, ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம் வருவார் என்றோ அன்றைக்கு அவரும் நினைக்கவில்லை. தன்னைப் பற்றி முரளியும் நினைக்கவில்லை.

84ம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னடப்படத்தில் அறிமுகமானார் முரளி. அப்போது அவருக்கு வயது 20. அதேவருடத்தில், தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார். கே.பாலசந்தரின் கவிதாலயாவின் துணை பேனரில், கைலாஷ் கம்பைன்ஸ் பேனரில், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர்ஜானின் இயக்கத்தில் ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியானது. முரட்டுத்தனமும் பிள்ளை குணமும் கொண்ட கல்லூரி இளைஞன் வேடம் முரளிக்கு அழகாகப் பொருந்தியது. சொல்லப்போனால், முதல் படத்தில் மட்டுமல்ல... முக்கால்வாசி படங்களில், கல்லூரி இளைஞராக வலம் வந்தது, அநேகமாக முரளி எனும் ஒரேயொரு நடிகராகத்தான் இருக்கும்.

வீரம், ஆவேசம், துடிப்பு, காதல், காதலிக்குக் கட்டுப்படுதல், அவலத்தை எதிர்த்தல் என்று முதல் படத்திலேயே ஸ்கோர் அடித்து முன்னேறினார். கருகருவென நிறமும் வெள்ளைவெளேரென கண்களும் ரொம்பவே ரசிகர்களை ஈர்த்தன. நடிகை குயிலிதான் முரளியின் முதல் நாயகி. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் தன் பங்கைச் செலுத்தினார். ‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு’, ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’, ‘லவ் மீ லவ் மீ’, ‘போட்டேனே பூவிலங்கு’ என்று எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இதில் ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ பாட்டு இன்றைக்கும் பலருக்கும் ஃபேவரிட் பாட்டு.

முதல் படத்திலேயே இப்படியாக கவனம் ஈர்த்த முரளி, அதே 84ம் ஆண்டில், வரிசையாக படங்களில் நடித்தார். ’புதியவன்’ என்ற படத்தில் நடித்தார். இயக்குநர் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அற்புதமான கேரக்டரில் வெகு யதார்த்தமாக செய்தார். மிகப்பெரிய வரவேற்பு முரளிக்குக் கிடைத்தது.
அந்த சமயத்தில், அடுத்த வெற்றி முரளியைத் தேடிவந்தது. கன்னடத்தில் ‘பல்லவி அனு பல்லவி’யெல்லாம் எடுத்திருந்த மணிரத்னம், தமிழில் முதன்முதலாக ‘பகல் நிலவு’ படத்தை இயக்கினார். சத்யராஜ், முரளி நடித்த இந்தப் படத்தில் இருவருமே நடிப்பில் அசத்தினார்கள். இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ‘பூமாலையே இரு தோள்சேருதோ’ உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் முக்கால்வாசி பேரின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும்.

85ம் ஆண்டிலேயே ‘புதிர்’ படத்தில், இரட்டை வேடத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நிலையான இடம் கிடைத்தது முரளிக்கு. முரளியா... சம்பளக் கெடுபிடி செய்யமாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். முரளியா... எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று இயக்குநர்கள் சொன்னார்கள். முரளியின் படங்கள்... முதலுக்கு மோசம் செய்யாது என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ந்து போனார்கள்.

எண்பதுகளில், சுமாரான படம் என்றாலே நாற்பது நாள், ஐம்பது நாள் ஓடிவிடும். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் என்று பல நடிகர்கள் தங்களுக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ வைத்திருந்தார்கள். அப்படியொரு மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகராக முரளியும் உயர்ந்தார்.

இளையராஜாவின் சொந்தப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். இதில் முரளிதான் நாயகன். இந்தப் படத்தில் முரளிக்கான பாடல்களையெல்லாம் இளையராஜாவே பாடினார். அப்போதெல்லாம் முரளிக்கு எஸ்.பி.பி. குரலும் செட்டாகும், இளையராஜாவின் குரலும் செட்டாகும் என்று ரசிகர்கள் சொன்னார்கள்.
கவிதாலயாவின் ‘வண்ணக்கனவுகள்’ படம் கார்த்திக்கிற்கும் முரளிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இருவருமே நடிப்பில் அசத்தினார்கள். பாடல்கள் இல்லாமல் வந்த இந்தப் படம், முரளியின் திரைவாழ்வில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

முக்தா பிலிம்ஸின் ‘ஒரு மலரின் பயணம்’, மனோஜ்குமார் இயக்கத்தில் ‘மண்ணுக்குள் வைரம்’ என்று வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. இந்தசமயத்தில்தான் 89ம் ஆண்டு, மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த படமாக வந்தது ‘புதுவசந்தம்’. இயக்குநர் விக்ரமனின் முதல் படமான ‘புதுவசந்தம்’, சூப்பர் குட் பிலிம்ஸின் ‘புதுவசந்தம்’ முரளியின் வாழ்விலும் வசந்தமென வீசியது. இன்னும் இன்னுமாக படங்கள் குவியத் தொடங்கின.


கார்வண்ணனின் ‘பாலம்’, ‘புதிய காற்று’, அடுத்து ‘நானும் இந்த ஊருதான்’, ’நம்ம ஊரு பூவாத்தா’,’சாமி போட்ட முடிச்சு’, ‘சின்னப்பசங்க நாங்க’ என்று நூறு நாள், இருநூறு படங்களாக அமைந்தன.

91ம் ஆண்டு, சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில், கதிர் இயக்கத்தில், இளையராஜா இசையில் ‘இதயம்’ படம் வெளியானது. எல்லார் இதயங்களிலும் தனியிடம் பிடித்தார் முரளி. காதலைச் சொல்லாமல் தவித்த கேரக்டர் என்று ‘ஒருதலைராகம்’ சொல்லப்பட்டு வந்தது. ஆனால் காதலைச் சொல்லமுடியாத ஏக்கத்தை, துக்கத்தை, வலியை, வேதனையை, இயலாமையை தன் முகபாவங்களில் அழகாக வெளிப்படுத்தினார். மிக ஆழமாக தன் குரலின் வழியே வெளிப்படுத்தினார். சொல்லப்போனால், முரளியின் குரலில் ஒரு மென்சோகம் இழையோடிக்கொண்டே இருக்கும்.

’இதயம்’ கதாபாத்திரத்தை, முரளியைத் தவிர வேறு எவரும் இத்தனை இயல்பாகவும் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் நடித்திருக்கவே முடியாது என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. பிறகு வெள்ளிவிழாப் படங்கள் என்று வரிசையாக அமைந்தன. வெள்ளிவிழா நாயகன் என்றே முரளியைப் புகழ்ந்தது தமிழ் சினிமா.

‘பொட்டுவைத்த ஒரு வட்டநிலா’வையும் ‘ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ பாடலையும் ‘இது முதன்முதலா வரும் பாட்டு’ என்ற பாடலையும் முரளியின் முகபாவங்களையும் யாரால்தான் மறக்கமுடியும். அதிலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில், வடிவேலுவுடன் சேர்ந்து முரளி அடித்த லூட்டியையும் இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பை அடக்கமுடியாது.

சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படமென்றாலே முரளி இருப்பார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ உள்ளிட்ட படங்களெல்லாம் ஹிட். சேரனின் ‘பொற்காலம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

’வாட்டாக்குடி இரணியன்’, ‘அதர்மம்’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’ என எண்ணற்ற படங்கள், முரளியின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தின.

‘பூவிலங்கு’ படத்தில் அறிமுகமான அதே முரளியை, மகன் அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’யிலும் அதே இளமையுடன் பார்த்தார்கள். ரசிகர்கள்.முரளி இன்றைக்கு இருந்திருந்தால், கல்லூரி மாணவ ஹீரோவாக... இன்றைக்கும் வலம் வந்துகொண்டிருப்பார்.

முரளி... தமிழ் சினிமாவின் தனித்துவமான, மகத்துவமான நாயகன். இன்று 8ம் தேதி அவரின் நினைவுநாள்.

இதய நாயகன் முரளியைப் போற்றுவோம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x