Published : 07 Sep 2020 15:18 pm

Updated : 07 Sep 2020 15:18 pm

 

Published : 07 Sep 2020 03:18 PM
Last Updated : 07 Sep 2020 03:18 PM

'இந்தி தெரியாது போடா' என்பது இளைஞர்களுக்கு காட்டும் தவறான முன்னுதாரணம்: நடிகர் அபி சரவணன் ஆதங்கம்

hindi-theriyathu-poda-is-a-false-role-model-for-the-youth-actor-abi-saravanan

தமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என்ற டி-சர்ட் புரட்சி கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், ''இந்தி தெரியாது போடா என்ற வாசகங்களைப் பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தினருக்குத் தரும் தவறான முன்னுதாரணம்'' என நடிகரும் சமூக செயல்பாட்டாளருமான அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவு வருமாறு:


''கடந்த இரு நாட்களாக 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பிரபலங்களால் பிரபலப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டிக்காட்டலும்.

இந்தி என்பது ஒரு மொழி. இந்தி ஒரு தகவல் மீடியம். தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்தியாவில் அதிகப்படியாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்று. நமது தாய்மொழி தமிழ் நமக்கு உயிர்போல. அதுபோல இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு.

சில தீவிர இந்தி மொழிப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியைத் திணித்து நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர். ஆனால், இந்தியைப் படித்த பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணிசெய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

மொழி மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாகத் திணித்தால் அல்லது கட்டாயப் டுத்தினால் இயற்கையாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும். நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இந்தியைக் கற்காமல் உதாசீனப்படுத்தியதால், வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டுப் பேச வேண்டியிருக்கிறது.

இந்தி கற்பதால் நமது அறிவு மழுங்கப் போவதில்லை. இந்தியை ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுகொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் எனப் பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால், எந்தக் காலத்திலும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்து அல்லது நீக்கி இந்தியைத் திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்க முடியாது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மெஷின்கள், அறிவிப்புப் பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், தமிழைத் தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்குக் கற்றுதரும். அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.

ஆனால், ஒரு சில பிரபலங்கள் லைக்குகள் பெறுவதற்காக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்தைப் பிரபலப்படுத்துவது இளைய சமுதாயத்திற்கு நாம் தரும் தவறான முன்னுதாரணம். ‘இந்தி தெரியாது போடா’ எனத் தனக்குப் பிடித்த பிரபலத்தின் படத்தை, சமூக வலைதளத்தில் மட்டுமல்ல தனது மனதிலும் பகிர்ந்து, பதிந்து கொள்கிறது இளைய சமுதாயம்.

நமது உயிருக்கும் மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து, ஆங்கிலம் மற்றும் இந்தியையும் புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்துக் கற்றுக் கொள்ள வேண்டும் அது நமக்கு நிச்சயம் உதவும். எனவே, இந்தி எதிர்ப்புப் பிரபலங்கள் தங்கள் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் டீசர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்,
இந்தி தெரியாத தமிழன்
அபி சரவணன்''.
இவ்வாறு அபி சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!


Hindi theriyathu podaஇந்தி தெரியாது போடாஇளைஞர்கள்தவறான முன்னுதாரணம்நடிகர் அபி சரவணன்அபி சரவணன் ஆதங்கம்இந்தித் திணிப்புஇந்தி மொழி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author