விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண நிச்சயம்: ட்விட்டரில் பகிர்வு 

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண நிச்சயம்: ட்விட்டரில் பகிர்வு 
Updated on
1 min read

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

'ஜகஜால கில்லாடி', 'எஃப்.ஐ.ஆர்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதில் 'ஜகஜால கில்லாடி' படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் விவாகரத்து ஆனது. 2018-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி ரஜினியுடன் விவாகரத்து ஆகிவிட்டதை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார் விஷ்ணு விஷால். இருவரும் காதலித்து வருவதை நண்பர்கள் உறுதிப்படுத்தினார்கள். 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இருவருமே காதலிப்பதை உறுதி செய்தார்கள்.

இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பிறந்தநாள் வாழ்த்துகள் ஜுவாலா கட்டா. வாழ்க்கைக்கு புதிய துவக்கம். நமக்கு, ஆர்யனுக்கு, நம் குடும்பங்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் நல்ல எதிர்காலத்துக்காக உழைப்போம். நேர்மறையாக இருப்போம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதங்களும் வேண்டும். நடு இரவில் மோதிரத்துக்கு ஏற்பாடு செய்த பசந்த் ஜெயினுக்கு நன்றி."

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் அறிவிப்பைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in