

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, "நீண்ட நாட்கள் கழித்து ஒரு படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் தமிழ் படம் இது தான். விடுமுறை நாட்களில் தான் திரையரங்குகள் நிரம்புவது பார்த்து வருகிறோம்.
'தனி ஒருவன்' படத்துக்கு வார நாட்களில் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. தமிழக அரசு வரிச்சலுகையும் கொடுத்திருப்பதால் இப்படம் கண்டிப்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய் லாபம் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ராம்சரண் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்தியில் சல்மான்கானும் இப்படத்தை பார்த்திருக்கிறார்.
ரீமேக் உரிமையில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்து தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, "தெலுங்கு, இந்தி இரண்டு ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி நிலவி வருவது உண்மை தான். ஆனால், இன்னும் ஒரிரு வாரத்தில் உரிமை யாருக்கு, யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரியும்" என தெரிவித்தார்கள்.