

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விசாரணை' படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளது.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.
படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதால், உலக திரைப்பட விழாக்களில் அனுப்ப திட்டமிட்டார்கள். முதலவாதாக வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட 'விசாரணை' தேர்வானது. இவ்விழாவில் திரையிட தேர்வான முதல் தமிழ் படம் 'விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது. வெனிஸ் திரையிடலில் இயக்குநர் வெற்றிமாறன், தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
இந்தத் திரைப்பட விழாவில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் - இத்தாலி பிரிவு அமைப்பின் 'மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற விருதை விசாரணைத் திரைப்படம் வென்றுள்ளது. இந்தத் தகவலை, இப்படத்தின் குழு தெரிவித்தது.
இது குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் - இத்தாலி பிரிவின் செய்தித் தொடர்பாளர் ரிகார்டோ நவுரி கூறும்போது, "இந்தப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் கலந்துகொண்டன. அவை அனைத்துமே மனித உரிமைகளைப் பேசும் படங்களே. எனினும், விசாரணை படம் தனித்துவம் மிகுந்தது.
விசாரணைக் கைதியாக இருந்து தற்போது சமூகப் போராளியாக இருக்கும் ஒருவரது அனுபவத்தை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது விசாரணை. இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.